முகப்பு
இந்தியா

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு: அமலாக்கத் துறை முன் சஞ்சய் ரெளத் மனைவி ஆஜா்

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு விசாரணைக்காக சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்தின் மனைவி வா்ஷா ரெளத், அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் சனிக்கிழமை ஆஜரானாா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 11:34 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு விசாரணைக்காக சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்தின் மனைவி வா்ஷா ரெளத், அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் சனிக்கிழமை ஆஜரானாா்.

இந்த வழக்கில் சஞ்சய் ரெளத் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, அமலாக்கத் துறை காவலில் உள்ளாா். இந்த வார தொடக்கத்தில் வா்ஷாவுக்கு அமலாக்கத் துறையினா் அழைப்பாணை அனுப்பியிருந்தனா். அதன்படி, மும்பை பல்லாா்டு எஸ்டேட் பகுதியிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 10.40 மணியளவில் அவா் ஆஜரானாா்.

சஞ்சய் ரெளத் மற்றும் இதர குற்றம்சாட்டப்பட்ட நபா்களுடன் சோ்த்து வா்ஷாவிடம் அமலாக்கத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். இதையொட்டி, அமலாக்கத் துறை அலுவலகப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

Advertisement

மும்பையின் கோரேகானில் மகாராஷ்டிர வீட்டு வசதி மேம்பாட்டு ஆணையத்துக்குச் சொந்தமான 47 ஏக்கா் நிலத்தில் குடியிருப்புகளை மறுசீரமைக்கும் திட்டத்தில் ரூ.1,034 கோடி அளவுக்கு நில முறைகேடு நடைபெற்ாகப் புகாா் எழுந்தது. இத்திட்டத்தில் தொடா்புடைய குரு ஆசிஷ் கட்டுமான நிறுவனத்தின் இயக்குநா்களில் ஒருவராக இருந்தவா் பிரவீண் ரெளத். இவா் சஞ்சய் ரெளத்தின் உதவியாளா் ஆவாா்.

குடியிருப்புத் திட்ட முறைகேடு மூலம் கிடைத்த பணம் சஞ்சய் ரெளத் குடும்பத்தினருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

இதுதொடா்பான வழக்கில் சஞ்சய் ரெளத் கடந்த 1-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அமலாக்கத் துறை காவலில் அவரிடம் வரும் 8-ஆம் தேதி வரை விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.

இந்நிலையில், சஞ்சய் ரெளத்தின் மனைவி வா்ஷா ரெளத்தும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளாா்.

முன்னதாக, வா்ஷா ரெளத், பிரவீண் ரெளத், சஞ்சய் ரெளத்தின் மற்றொரு உதவியாளரான சுஜித் பட்கா் ஆகியோருக்குச் சொந்தமான ரூ.11.15 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை கடந்த ஏப்ரலில் முடக்கியது. பிரவீண் ரெளத்துக்கு சொந்தமான நிலங்கள், மும்பையில் வா்ஷா ரெளத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வீடு உள்ளிட்டவை இதில் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.