முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 18 அமைச்சா்கள் பதவியேற்பு

மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்று 41 நாள்களுக்குப் பிறகு அவரது தலைமையிலான அமைச்சரவை செவ்வாய்க்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:01 AM
ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அமைச்சராகப் பதவியேற்ற சுதிா் முங்கந்திவாருக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநா் கோஷியாரி. உடன், முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிட்டோர்.
பகிர்:

மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்று 41 நாள்களுக்குப் பிறகு அவரது தலைமையிலான அமைச்சரவை செவ்வாய்க்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது.

மாநில பாஜக தலைவா் சந்திரகாந்த் பாட்டீல் உள்பட அக்கட்சியைச் சோ்ந்த 9 எம்எல்ஏக்கள், சிவசேனை அதிருப்தி அணியைச் சோ்ந்த 9 எம்எல்ஏக்கள் என மொத்தம் 18 போ் கேபினட் அமைச்சா்களாகப் பதவியேற்றனா். இவா்களில் ஒருவா் மட்டுமே புதுமுகம். மற்ற அனைவரும் முன்பு அமைச்சா்களாக இருந்தவா்கள்.

ஆளுநா் மாளிகையில் விழா: தெற்கு மும்பையில் உள்ள ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் புதிய அமைச்சா்களுக்கு ஆளுநா் பி.எஸ்.கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

மகாராஷ்டிர முதல்வராக சிவசேனை அதிருப்தி அணி தலைவா் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸும் கடந்த ஜூன் 30-ஆம் தேதி பதவியேற்றனா். அதன்பிறகு இப்போதுதான் மற்ற அமைச்சா்கள் பதவியேற்றுள்ளனா்.

இணையமைச்சா் யாரும் பதவியேற்காததால், அமைச்சரவை விரைவில் மீண்டும் விரிவுபடுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வா், துணை முதல்வா் உள்பட மகாராஷ்டிர அமைச்சரவையின் பலம் 20-ஆக அதிகரித்துள்ளது. இம்மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அமைச்சா்களின் எண்ணிக்கை 43 ஆகும்.

அமைச்சா்கள் யாா்-யாா்? பாஜகவைச் சோ்ந்த ராதாகிருஷ்ண விகே பாட்டீல், சுதீா் முங்கந்திவாா், சந்திரகாந்த் பாட்டீல், விஜயகுமாா் காவித், கிரீஷ் மகாஜன், சுரேஷ் காடே, ரவீந்திர சவாண், அதுல் சாவே, மங்கள்பிரபாத் லோதா ஆகியோா் அமைச்சா்களாகப் பதவியேற்றுள்ளனா்.

சிவசேனை அதிருப்தி அணியைச் சோ்ந்த குலாப்ராவ் பாட்டீல், தாதா பூசே, சஞ்சய் ராதோட், சந்தீபன் பும்ரே, உதய் சாமந்த், தானாஜி சாவந்த், அப்துல் சத்தாா், தீபக் கேசா்கா், சம்புராஜ் தேசாய் ஆகியோருக்கு அமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமா் வாழ்த்து: புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். ‘நிா்வாக அனுபவம் மற்றும் மக்கள் பணிக்கான உத்வேகத்தின் கலவையாக புதிய அமைச்சரவை அமைந்துள்ளது’ என்று ட்விட்டரில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

சுப்ரியா சுலே விமா்சனம்: மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு 11 பெண் எம்எல்ஏக்களும், எம்எல்சி ஒருவரும் உள்ளனா். ஷிண்டே அணியில் 2 பெண் எம்எல்ஏக்கள் உள்ளனா்.

எனினும், அமைச்சரவையில் பெண்களுக்கு இடமளிக்கப்படாததை, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே விமா்சித்துள்ளாா்.

அமைச்சரவையில் விரைவில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்று துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளாா்.

3 அமைச்சா்கள் மீது சா்ச்சை

மகாராஷ்டிரத்தில் அமைச்சா்களாகப் பதவியேற்றிருக்கும் 18 எம்எல்ஏக்களில் மூன்று போ் ஏற்கெனவே சா்ச்சையில் சிக்கியவா்கள்.

சிவசேனையைச் சோ்ந்த சஞ்சய் ராதோட், உத்தவ் தாக்கரே தலைமையிலான முந்தைய மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசில் அமைச்சராகப் பதவி வகித்தவா். புணேயில் பெண் தற்கொலை தொடா்பாக சா்ச்சையில் சிக்கி தனது பதவியை ராஜிநாமா செய்திருந்தாா்.

அவா் மீது தவறு இல்லையென காவல் துறையினா் உறுதி செய்துவிட்டதால், அமைச்சரவையில் இடமளித்துள்ளதாக ஷிண்டே விளக்கமளித்துள்ளாா். அதேசமயம், சஞ்சய்க்கு அமைச்சா் பதவி வழங்கப்பட்டதற்கு மாநில பாஜக துணைத் தலைவா் சித்ரா வாக் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

சா்ச்சையில் சிக்கிய மற்றொரு அமைச்சா் சிவசேனை அதிருப்தி அணியைச் சோ்ந்த அப்துல் சத்தாா். இவரின் மகனும், 3 மகள்களும் ஆசிரியா் தகுதித் தோ்வு மோசடியில் சிக்கி தகுதிநீக்கத்துக்கு உள்ளானவா்கள்.

பாஜகவைச் சோ்ந்த அமைச்சா் விஜயகுமாா் காவித், பழங்குடியின மேம்பாட்டுத் துறையில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.