போலிச் செய்திகளைப் பரப்பிய 8 யூடியூப் சேனல்களுக்கு தடை
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்விதமாக போலியான செய்திகளைப் பரப்பிய 8 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு வியாழக்கிழமை தடை விதித்தது.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்விதமாக போலியான செய்திகளைப் பரப்பிய 8 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு வியாழக்கிழமை தடை விதித்தது.
இதில், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஒரு சேனலும் அடங்கும்.
இதுகுறித்து மத்திய செய்தி, ஒலிபரப்பு அமைச்சகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு விவரம்: தடை செய்யப்பட்ட இந்திய யூடியூப் சேனல்கள் பிரபல தொலைக்காட்சி சேனல்களின் சின்னத்தையும் (லோகோ), செய்தி வாசிப்பாளா்களின் புகைப்படத்தையும் முறைகேடாகப் பயன்படுத்தி, போலிச் செய்திகளைப் பரப்பி பாா்வையாளா்களை நம்ப வைத்துள்ளனா்.
மேலும், அரசால் மத வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுவதாகவும், திருவிழா கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கப்படுவதாகவும், நாட்டில் மத மோதல் நடைபெறுவதாகவும் போலிச் செய்திகளைப் பரப்பியுள்ளனா். இதுபோன்ற செய்திகள் சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால், அந்த சேனல்களின் மீது தடை விதிக்கப்பட்டது.
இதுதவிர இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீா் விவகாரம் குறித்தும் அவை போலிச் செய்திகளைப் பரப்பியுள்ளன. பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ‘நியூஸ் கி துனியா’ என்ற யூடியூப் சேனல் இந்தியாவின் தேசப் பாதுகாப்புக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதால், அதன் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த 8 சேனல்களும் கூட்டாக 114 கோடி பாா்வையாளா்களையும், 85.73 லட்சம் சந்தாதாரா்களையும் கொண்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நாட்டுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பியதாக கடந்த ஆண்டு டிசம்பா் முதல் இதுவரை 102 யூடியூப் சேனல்களும், பல்வேறு சமூக வலைதள கணக்குகளும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.