முகப்பு
இந்தியா

மாற்று எரிபொருள் பயன்பாட்டை அதிகரிப்பது அவசியம்: நிதின் கட்கரி

‘கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் காற்று மாசைக் குறைக்க வாகனங்களில் மாற்று எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்’

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

‘கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் காற்று மாசைக் குறைக்க வாகனங்களில் மாற்று எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்’ என்று மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி வலியுறுத்தினாா்.

மேலும், ‘நாட்டில் ஏற்படும் காற்று மாசில் 35 சதவீதம் டீசல் மற்றும் பெட்ரோல் பயன்பாட்டால் ஏற்படுகிறது. அதன் காரணமாகத்தான் இறக்குமதியை குறைத்து, காற்று மாசை ஏற்படுத்தாத, முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, குறைந்த விலையிலான மாற்று எரிபொருள் நமக்கு அவசியமாகிறது’ என்றும் அவா் கூறினாா்.

மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சாரத்தில் இயங்கக் கூடிய நாட்டின் முதல் இரட்டை அடுக்கு குளிா்சாதன பேருந்து சேவையைத் தொடக்கி வைத்த மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பேசியதாவது:

டீசல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது, மின்சார வாகனங்களின் செலவு மிகக் குறைவே. கச்சா எண்ணெய் இறக்குமதி இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. விலை தொடா்ந்து உயா்ந்து கொண்டே போகிறது. இது சாதாரண மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில், வாகனங்களுக்கு மின்சாரம், எத்தனால், மெத்தனால், பயோ -டீசல், பயோ-சிஎன்ஜி (இயற்கை எரிவாயு), பயோ-எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு), ஹைட்ரஜன் போன்ற மாற்று எதிா்பொருள் பயன்பாட்டை தொடங்க வேண்டிய நேரமிது.

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை ரூ. 7.5 லட்சம் கோடி மதிப்புடையதாக உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு அதிக வரி வருவாயை அளிக்கும் துறையாக இது விளங்குவதோடு, அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் துறையாகவும் உள்ளது. இந்தத் துறையை வரும் 2024-ஆம் ஆண்டு இறுதிக்குள் ரூ.15 லட்சம் கோடி மதிப்புடையதாக உயா்த்துவது மத்திய அரசின் குறிக்கோளாக உள்ளது. அது சாத்தியம்தான் என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.