வணிக நீதிமன்றங்கள், நடுவர் மன்ற நடைமுறைகள்: இணைந்து செயல்பட இந்தியா - பிரிட்டன் முடிவு
வணிக நீதிமன்றங்கள் மற்றும் மத்தியஸ்தம், நடுவர் மன்றங்கள் போன்றவற்றின் பணி அனுபவங்கள், சிறந்த நடைமுறைகள், தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள இந்தியாவும் பிரிட்டனும் ஒப்புக்கொண்டுள்ளன.
வணிக நீதிமன்றங்கள் மற்றும் மத்தியஸ்தம், நடுவர் மன்றங்கள் போன்றவற்றின் பணி அனுபவங்கள், சிறந்த நடைமுறைகள், தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள இந்தியாவும் பிரிட்டனும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தியா-பிரிட்டன் நாடுகளுக்கிடையேயான ஆலோசனைக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
சட்டம் மற்றும் நீதித் துறையில், இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவும், பிரிட்டனும் ஒப்பந்தத்தை மேற்கொண்டு கையொப்பமிட்டன. மேலும், கடந்த 2021, மே 4 -ஆம் தேதி இரு நாட்டு பிரதமர்களும் காணொலி வழியாக பங்கேற்ற கூட்டத்தின் பேச்சின் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்களை நிறைவேற்ற கூட்டு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் குழு மூன்று முறை கூடியது.
இதில், இந்திய தரப்பில் சட்டத் துறைச் செயலர் டாக்டர் நிதேன் சந்தரா, மத்திய சட்ட விவகாரங்கள் துறை, சட்டத் துறை, நீதித் துறை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள், தேசிய சட்ட சேவைகள் ஆணைய உறுப்பினர்-செயலர், இந்திய சட்ட நிறுவன இயக்குநர் ஆகியோரும், பிரிட்டன் தரப்பில், அந்நாட்டின் நீதித் துறை அமைச்சகத்தின் இரண்டாம் நிலை செயலர் டாக்டர் ஜோ ஃபரார் தலைமையில் அந்நாட்டின் நீதித் துறை அதிகாரிகள், புதுதில்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரக மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய சட்ட அமைச்சகம் தரப்பில் கூறியது: இரு நாடுகளின் வணிக நீதிமன்றங்களின் பணி அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை இருதரப்பும் பகிர்ந்து கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்தியஸ்தம் மற்றும் நடுவர் மன்றங்கள் போன்றவற்றில் உள்ள மாற்று தகராறு தீர்வு வழிமுறைகள், தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. வழக்கு நிர்வாகம், நீதி வழங்குதல், ஒப்பந்தங்களைச் செயல்படுத்துதல் மற்றும் எளிமையான சட்டவரைவு ஆகியவற்றில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஆகியவை தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
சட்ட ஆலோசகர்கள், வரைவாளர்கள், நீதித் துறை அதிகாரிகள், அரசு வழக்குரைஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் ஆகியோருக்கு புகழ்பெற்ற நிறுவனங்கள் மூலம் பயிற்சி அளிக்கவும், திறன் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி இரு நாடுகளின் பார் கவுன்சில் பிரதிநிதிகள் கலந்துகொண்ட மற்றொரு கூட்டத்தில் சட்ட சேவைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதில் இரு நாட்டு வழக்குரைஞர்களும் பரஸ்பரம் சட்டசேவைகள் அணுகலை மேற்கொள்வது குறித்தும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.