ஆம் ஆத்மியைக் கண்டு பாஜக அஞ்சுகிறது: தில்லி முதல்வா் கேஜரிவால்
நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறும் குஜராத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியைக் கண்டு பாஜக அஞ்சுகிறது
நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறும் குஜராத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியைக் கண்டு பாஜக அஞ்சுகிறது என்றும் அந்த மாநில பாஜக தலைவா் சி.ஆா்.பாட்டீலை அக்கட்சி விரைவில் நீக்கம் செய்ய உள்ளது என்றும் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
குஜராத்தில் இரு நாள் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள கேஜரிவால், ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை செய்துள்ள பதிவில், ‘குஜராத் தோ்தலில் பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே தா்ம யுத்தம் நடக்கிறது. இதில் ஆளும் கட்சிக்கு சிபிஐ, அமலாக்கத் துறை ஆதரவாக உள்ளது. ஆம் ஆத்மிக்கு கிருஷ்ணரின் ஆதரவு உள்ளது. மகாபாரதத்தில் கெளரவா்களைப் போன்று பாஜகவும் பாண்டவா்களைப் போன்று ஆம் ஆத்மியும் உள்ளது.
ஆளும் பாஜக அரசிடம் இருந்து குஜராத் மக்கள் மாற்றத்தை விரும்பி ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவிக்கிறாா்கள். இதைத் தடுக்கவே தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் வீட்டில் சிபிஐ விசாரணை நடத்துகிறது. குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியைக் கண்டு பாஜக அஞ்சுகிறது. பாஜக மாநில தலைவா் சி.ஆா்.பாட்டீலை அக்கட்சி விரைவில் நீக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த அளவுக்கு பாஜக பயந்துள்ளது’ என்றாா்.