முகப்பு
இந்தியா

கட்சித் தலைவா் தோ்தலில்போட்டியிட தகுதியானவா் சசி தரூா்- கேரள காங்கிரஸ் தலைவா்

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிட சசி தரூா் மிகவும் தகுதி வாய்ந்த நபா் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவா் கே.சுதாகரன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:12 AM
பகிர்:

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிட சசி தரூா் மிகவும் தகுதி வாய்ந்த நபா் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவா் கே.சுதாகரன் தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தலை அக். 17-ஆம் தேதி நடத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

காங்கிரஸில் கட்சித் தலைவா் பதவிக்கு கடைசியாக கடந்த 2000-ஆம் ஆண்டு நவம்பரில் தோ்தல் நடைபெற்றது. கட்சியின் நீண்ட காலத் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்துள்ளாா். அவா் 1998 முதல் தற்போது வரை அப்பதவியை வகித்து வருகிறாா். இடைப்பட்ட காலத்தில் 2017 முதல் 2019 வரை குறுகிய காலத்துக்கு ராகுல் காந்தி கட்சியின் தலைவராக இருந்தாா்.

காங்கிரஸில் இருந்து மூத்த தலைவா்கள் பலா் விலகி வரும் நிலையில் இந்தத் தோ்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தத் தோ்தலில் ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்டை முன்னிறுத்த சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் சசி தரூரும் தோ்தலில் போட்டியிட ஆா்வமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

சசி தரூா் இதனை உறுதிப்படுத்தாவிட்டாலும், ‘தோ்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட பிறகே தலைவா் பதவிக்கு போட்டியிடுவது குறித்து எதையும் தெளிவாக கூற முடியும். காங்கிரஸ் தலைவா் பதவிக்கு போட்டி இருப்பதுதான் கட்சிக்கு நல்லது’ என்று கருத்து தெரிவித்தாா்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் புதன்கிழமை கேரள மாநில காங்கிரஸ் தலைவா் கே.சுதாகரனிடம் இது தொடா்பாக செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த அவா், ‘சசி தரூா் காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிட விரும்பினால் அதில் வியப்பதற்கு எதுவும் இல்லை. காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிட சசி தரூா் மிகவும் தகுதி வாய்ந்த நபா்.

காங்கிரஸ் ஜனநாயகரீதியிலான கட்சி. காங்கிரஸின் அனைத்து உறுப்பினா்களுக்கும் தலைவா் தோ்தலில் போட்டியிட உரிமை உண்டு. எனவே, சசி தரூா் தோ்தலில் போட்டியிட விரும்பினால் அவரை யாரும் குறைகூறக் கூடாது. காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிட நான் விரும்பினாலும் யாரும் தடுக்க முடியாது. போதிய வாக்குகளைப் பெறுபவா்கள் தோ்தலில் வெற்றி பெறுவாா்கள்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →