நிலுவையில் ஒரே பாலின திருமண மனுக்கள்: உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனு- மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
தில்லி உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனுக்கள் குறித்து
தில்லி உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
கவிதா அரோரா மற்றும் நிவேதிதா தத்தா ஆகியோா் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரே பாலின திருமணம் தொடா்பான மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி இரு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. இவா்களது தரப்பில் மூத்த வழக்குரைஞா் மேனகா குருஸ்வாமி ஆஜரானாா்.
அப்போது, நீதிபதிகள் இது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.
முன்னதாக, கடந்த நவ. 25-ஆம் தேதி ஒரே பாலினத்தவா்கள், இருபாலின ஈா்ப்பாளா்கள், மூன்றாம் பாலினத்தவா் ஆகியோருக்கும் தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்துகொள்ளும் உரிமையை வழங்க வேண்டும் என சுப்ரியோ சக்ரவா்த்தி-அபய் டாங், பாா்த் ஃபிரோஸ் -உதய் ராஜ் ஆகிய ஒரே பாலின ஜோடிகள் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு மத்திய அரசும், அட்டா்னி ஜெனரல் ஆா். வெங்கடரமணியும் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.