தில்லியில் அரங்கேறிய ஷ்ரத்தா கொலை சம்பவத்தைப் போன்று உத்தரப் பிரதேசத்திலும் கொலை சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் வாடகைக்குத் தங்கியிருந்த மாணவரைக் கொன்று அவரின் உடலை மூன்று பாகங்களாக வெட்டி மூன்று இடங்களில் வீசிய கொலையாளிகை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவரிடம் இருந்த ஒரு கோடி ரூபாய்க்கு ஆசைப்பட்டு வீட்டு உரிமையாளர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத் மாவட்டத்திலுள்ள மோடி நகர் பகுதியில் உமேஷ் சர்மா என்பவர் வசித்து வந்துள்ளார். அவரின் வீட்டில் ஆராய்ச்சி மாணவரான அன்கித் கோகார் தங்கிப் பயின்றுள்ளார். அவர் லெக்னெள பல்கலைக் கழகத்தில் பி.எச்டி பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில், அன்கித்தின் பெற்றோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பாக்பாத் பகுதியிலிருந்த அவர்களின் பூர்விக சொத்தை அன்கித் விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் ரூ.1 கோடி கிடைத்துள்ளது.
பெற்றோர் துணையின்றி தனியொருவராக பயின்று வரும் அன்கித்தை, அவரின் வீட்டு உரிமையாளர் பணத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன்படி கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை மூன்று பாகங்களாக வெட்டி மூன்று இடங்களிலுள்ள கால்வாயில் வீசியுள்ளார். கடந்த அக்டோபர் 6ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
அன்கித்திடமிருந்து பல நாள்களாக எந்தவொரு பதிலும் வராததால், அவரின் நண்பர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதில் வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டதில் உண்மைகளை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். வீட்டு உரிமையாளரின் நண்பரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
அன்கித் தொலைபேசி எண்ணிலிருந்து தொடர்ந்து வந்த குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், போன் செய்தால், பதிலளிக்காமல் அழைப்புகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. குறுஞ்செய்திகளும் அன்கித் அனுப்புவதைப் போன்று இல்லை என நண்பர்கள் அளித்த தகவல்களை துருப்புச்சீட்டாக வைத்து காவல் துறையினர் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளனர்.
அன்கித்தின் ஏடிஎம் அட்டையிலிருந்து வீட்டு உரிமையாளர் ரூ.20 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். மேலும், அன்கித்தின் ஏடிஎம் அட்டையை வீட்டு உரிமையாளர் தனது நண்பரிடன் கொடுத்து மீத பணத்தை உத்தரகண்ட் மாநிலத்தின் ஏடிஎம்மிலிருந்து எடுக்கும்படி தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், முஸாபர் நகரிலுள்ள கால்வாய், முசெளரி கால்வாயில் அன்கித் உடல்களின் பாகங்களை காவல் துறையினர் கைப்பற்றி விசாரணைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
தில்லியில் உடன் தங்கியிருந்த காதலி ஷ்ரத்தாவை, காதலனே கொன்று உடலை 33 பாகங்களாக வெட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது உத்தரப் பிரதேசத்திலும் அதே பாணியிலான சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.