பயிர் காப்பீடு: 'விவசாயிகளுக்கு ரூ.1,000 கிடைப்பதை உறுதி செய்வோம்'
பயிர்க் காப்பீட்டிற்குத் தகுதியான விவசாயிகளுக்கு இனி குறைந்தபட்சமாக ரூ.1,000 உறுதியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர விவசாயத் துறை அமைச்சர் அப்துல் சத்தார் இன்று (டிச.15) தெரிவித்தார்.
மும்பை: பயிர்க் காப்பீட்டிற்குத் தகுதியான விவசாயிகளுக்கு இனி குறைந்தபட்சமாக ரூ.1,000 உறுதியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர விவசாயத் துறை அமைச்சர் அப்துல் சத்தார் இன்று (டிச.15) தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:
பயிர் காப்பீடு கோரி 50 லட்சம் விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தகுதியுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் குறைந்தபட்சம் ரூ. 1,000 பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம்.
பயிர்ச் சேத மதிப்பீடு முடிக்கப்பட்டு, இதுவரை 1,902 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில், வழங்கப்பட வேண்டிய மொத்தத் தொகை ரூ.2,313 கோடியாக உள்ளது என்றார்.
பருவமழைக்குப் பிந்தைய மழையால் ஏற்பட்ட பயிர் இழப்பு குறித்து கேள்வி எழுப்பிய அவர், இந்தப் பிரச்னை முன்பு இல்லை, ஆனால் சமீப வருடங்களில் இது போன்று அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண மாநில அரசு ஒரு குழுவை அமைக்க முன்மொழிந்துள்ளதாகத் தெரிவித்தார்.
ராபி பயிர் உற்பத்தியை சேதப்படுத்தும் இத்தகைய மழை முன்பு இல்லை. அதே வேளையில், சேதம் ஏற்பட்ட பயிர் இழப்புக்காக இதுவரை விவசாயிகளுக்கு ரூ.760 கோடி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.