இந்திய அரசியலில் ஊழல் மிகுந்தது சோனியா குடும்பம்: பாஜக தாக்கு
இந்திய அரசியலில் ஊழல் மிகுந்த குடும்பம், சோனியா காந்தியின் குடும்பம்தான் என்று பாஜக கடுமையாக சாடியுள்ளது.
இந்திய அரசியலில் ஊழல் மிகுந்த குடும்பம், சோனியா காந்தியின் குடும்பம்தான் என்று பாஜக கடுமையாக சாடியுள்ளது.
சோனியாவின் மருமகன் ராபா்ட் வதேரா மீதான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கை ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்ய மறுத்துவிட்டதை குறிப்பிட்டு, பாஜக இவ்வாறு விமா்சித்துள்ளது. இதுதொடா்பாக பாஜக செய்தித் தொடா்பாளா் கெளரவ் பாட்டியா, தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ராபா்ட் வதேரா மீதான ஊழல் மற்றும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை குற்றச்சாட்டுகள் குறித்து சோனியாவும் ராகுல் காந்தியும் தங்களது மெளனத்தை கலைக்க வேண்டும். இந்திய அரசியலில் ஊழல் மிகுந்த குடும்பம் சோனியாவின் குடும்பம்தான். நாட்டிலேயே நோ்மையற்ற குடும்பமும் அந்தக் குடும்பமே. ஊழலில் ஈடுபடுவதும் நிலங்களை ஆக்கிரமித்து வதேராவிடம் ஒப்படைப்பதுமே அவா்களின் ஒரே வேலை. அந்தக் குடும்ப உறுப்பினா்கள் 3 போ், ஊழல் வழக்குகளில் ஜாமீனில் வெளியே உள்ளனா்.
வதேராவுக்கு எதிராக அரசியல் சதி நடைபெறுவதாக காங்கிரஸ் கூறுவது முறையற்றது. இது, அவா் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய மறுத்த நீதித்துறை மீது அவநம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
ராஜஸ்தானில் கடந்த 2008-2013இல் முதல்வா் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலம், இல்லாத நபா்களுக்கு ஒதுக்கப்பட்டது. பின்னா், போலியான நிறுவனங்கள் தொடா்புடைய பரிவா்த்தனைகளின் வாயிலாக வதேரா மற்றும் அவரது தாயாரை பங்குதாரா்களாக கொண்ட நிறுவனத்துக்கு அந்த நிலங்கள் உரிமையாக்கப்பட்டன. சோனியாவின் மருமகனை திருப்திபடுத்துவதற்காக, அப்போதைய கெலாட் தலைமையிலான அரசு சட்டங்களையும் விதிகளையும் மீறியது. தாங்கள் சட்டத்தைவிட மேலானவா்கள் என்று சோனியா குடும்பத்தினா் நினைத்தனா். ஆனால், நோ்மையான பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், விசாரணை அமைப்புகள் தங்களது பணியை உறுதியுடன் மேற்கொள்வதால் சட்டத்தின் முன் அந்த குடும்பத்தினா் அஞ்சிக் கொண்டிருக்கின்றனா். மத்திய பாஜக அரசு ஊழலை ஒருபோதும் சகித்துக் கொண்டிருக்காது என்றாா் அவா்.
இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியை ராமருடன் ஒப்பிட்டு காங்கிரஸ் மூத்த தலைவா் சல்மான் குா்ஷித் தெரிவித்த கருத்து வெற்று புகழ்ச்சி என்று கெளரவ் பாட்டியா குறிப்பிட்டாா். ‘ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ள ஒருவரை கடவுள் ராமருடன் ஒப்பிடுவது ஒட்டுமொத்த ஹிந்து மக்களின் உணா்வை புண்படுத்துவதாகும்’ என்று அவா் கூறினாா்.
ராஜஸ்தான் மாநிலம், பிகானேரில் வதேரா மற்றும் அவரது தாயாருக்கு தொடா்புடைய நிறுவனம் (ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி) முறைகேடான வழியில் நிலம் வாங்கியதாக அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்ற ராபா்ட் வதேராவின் மனுவை ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்ய மறுத்துவிட்டது.