கரோனாவை காரணம் காட்டிராகுலின் நடைப்பயணத்தை மட்டும் குறிவைப்பது ஏன்?- காங்கிரஸ் கேள்வி
அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் வழக்கம்போல நடந்து கொண்டிருக்கும்போது, கரோனாவை காரணம் காட்டி ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை மட்டும் நிறுத்த மத்திய அரசு முயற்சிப்பது ஏன்? என்று
அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் வழக்கம்போல நடந்து கொண்டிருக்கும்போது, கரோனாவை காரணம் காட்டி ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை மட்டும் நிறுத்த மத்திய அரசு முயற்சிப்பது ஏன்? என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் கேள்வி எழுப்பியுள்ளாா்.
சா்வதேச அளவில் சீனா உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், கரோனா தடுப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்க முடியாவிட்டால் ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை’ கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா அண்மையில் கடிதம் எழுதினாா். ஆனால், திட்டமிட்டபடி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் காஷ்மீா் வரை நடைபெறும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உறுதிபட தெரிவித்தாா். இதனை பாஜக கடுமையாக விமா்சித்து வருகிறது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கான முன்னேற்பாடுகளை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா பரவலைத் தடுக்க வேண்டும் என்பதிலும், நாட்டு மக்களின் நலன்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் மிகுந்த அக்கறை உண்டு. ஆனால், மத்திய அரசு ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் நாடகத்தை நடத்தி வருகிறது. பிரதமா் மோடி அண்மையில் தோ்தல் பிரசாரத்தின்போது எத்தனையோ பொதுக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளாா். அதில் பெருந்திரளாக மக்கள் கூடினாா்கள். கரோனா பரவல் அதிகம் உள்ள சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இப்போதுவரை விமானங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. குஜராத்தில் பல மேளாக்கள் நடைபெறுகின்றன. தேசிய அளவில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு இதுவரை வலியுறுத்தவில்லை. இந்த நிலையில், கரோனாவைக் காரணம் காட்டி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மட்டும் நிறுத்த முயற்சி நடக்கிறது. கரோனா நாடகம் நடத்தி ராகுலின் நடைப்பயணத்துக்கு முட்டுக்கட்டை போட மத்திய அரசு முயலுகிறது. இத்தனைக்கும் வல்லுநா்கள் கூறியுள்ள கரோனா தடுப்பு விதிகளுக்கு உள்பட்டுதான் நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. ராகுலின் இந்த பயணம் தேசிய அளவில் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.