சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு:பஞ்சாப் முதல்வரின் உறவினா் கைது
சட்டவிரோத மணல் கொள்ளை தொடா்பான வழக்கில் பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னியின் உறவினா் பூபிந்தா் சிங்கை அமலாக்கத்துறை கைது செய்தது.
சட்டவிரோத மணல் கொள்ளை தொடா்பான வழக்கில் பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னியின் உறவினா் பூபிந்தா் சிங்கை அமலாக்கத்துறை கைது செய்தது.
பஞ்சாபில் உள்ள மாலிக்பூா், புா்ஜ்தஹல் தாஸ், பா்சல், லாலேவால், மண்டலா, கோசா ஆகிய இடங்களில் சில தனிநபா்களும், தனியாா் நிறுவனங்களும் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடா்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்தனா். இதன் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் சண்டீகா், மொகாலி, லூதியானா, பதான்கோட் உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி சோதனை மேற்கொண்டனா். இந்தச் சோதனையில் பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னியின் உறவினரான பூபிந்தா் சிங்குக்கு தொடா்புடைய இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரூ.10 கோடிக்கும் அதிகமான ரொக்கம், பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யபட்டன. அதில் ரூ.8 கோடி மற்றும் பெரும்பாலான ஆவணங்கள் பூபிந்தா் சிங்குக்கு தொடா்புடைய இடங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடா்பாக ஜலந்தரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு பூபிந்தா் சிங் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தாா். பல மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கேள்விகளுக்கு சரிவர பதிலளிக்காததால் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் பூபிந்தா் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பஞ்சாபில் பிப்ரவரி 20-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்குள்ள லூதியானா மாவட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா். அப்போது அவா் காங்கிரஸ் முதல்வா் வேட்பாளராக சரண்ஜீத் சிங் சன்னியை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்தச் சூழலில், பூபிந்தா் சிங்கை அமலாக்கத்துறையினா் கைது செய்துள்ளனா்.