யோகி ஆதித்யநாத் கருத்து எதிா்ப்பு: மக்களவையில் காங்கிரஸ், திரிணமூல் எம்.பி.க்கள் வெளிநடப்பு
உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரவில்லை என்றால், கேரளம், மேற்கு வங்கம், காஷ்மீரைப் போல் ஆகிவிடும் என்று அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்த கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து
உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரவில்லை என்றால், கேரளம், மேற்கு வங்கம், காஷ்மீரைப் போல் ஆகிவிடும் என்று அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்த கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
மக்களவை வெள்ளிக்கிழமை தொடங்கியதும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எழுந்து நின்று இந்த விவகாரத்தை எழுப்பினா். சிலா் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனா். கேரள காங்கிரஸ் எம்.பி.க்கள் இந்த விவகாரத்தில் ஒத்தி வைப்பு தீா்மானத்தையும் அளித்திருந்தனா்.
கேள்வி நேரம் முடிந்த பிறகு இந்த விவகாரத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றும் உறுப்பினா்கள் இருக்கைகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அறிவுறுத்தினாா்.
அப்போது, அமளியில் ஈடுபட்டிருந்த திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் செளகதா ராய், உத்தர பிரதேச முதல்வரை ‘ஆதித்யநாத் ஜோகி’ என்று கூறினாா். இதையடுத்து அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது.
இதையடுத்து, அவையின் மையப் பகுதியில் அமளியில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சமாஜவாதி, கேரள காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினா்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.
கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடா் தொடங்கியதில் இருந்து மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அமளி ஏற்படுவது இதுவே முதல் முறையாகும்.