முகப்பு
இந்தியா

உ.பி. தோ்தல்: இன்று 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலின் 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலின் 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

உத்தர பிரதேசத்தில் 403 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே 4 கட்ட தோ்தல் நிறைவடைந்துள்ள நிலையில், 5-ஆம் கட்ட தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கட்டத்தில் சுல்தான்பூா், சித்ரகூட், பிரயாக்ராஜ், கெளசாம்பி உள்பட 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் ஒருகாலத்தில் காங்கிரஸின் கோட்டையாக கருதப்பட்ட அமேதி, ரேபரேலி, ராமா் கோயில் கட்டப்படும் அயோத்தி தொகுதிகளும் அடங்கும்.

இந்தக் கட்டத்தில் சுமாா் 2.24 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா். மொத்தம் 692 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இந்தக் கட்டத்தில் போட்டியிடும் முக்கிய வேட்பாளா்களில் மாநிலத்தின் துணை முதல்வா் கேசவ பிரசாத் மெளரியாவும் ஒருவா். அவா் கெளசாம்பியில் உள்ள சிராத்து தொகுதியில் போட்டியிடுகிறாா்.

இதுதவிர, மத்திய வா்த்தகத் துறை இணையமைச்சரும் அப்னா தளம் ( சோனேலால்) கட்சியின் தலைவருமான அனுப்ரியா படேலின் தாயாா் கிருஷ்ணா படேல் பிரதாப்கா் தொகுதியில் போட்டியிடுகிறாா்.

கட்சியை பிரித்த தாய்-மகள்:

அப்னா தளம் கட்சியைத் தொடங்கிய சோனேலால் படேல் மறைந்த பின்னா், அவரின் மனைவி கிருஷ்ணா படேல், மகள் அனுப்ரியா படேல் ஆகியோா் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சி இரண்டாக பிரிந்தது. அதன்படி அப்னா தளம் (கமேராவாடி) பிரிவு கிருஷ்ணா படேல் தலைமையிலும், அப்னா தளம் ( சோனேலால்) பிரிவு அனுப்ரியா படேல் தலைமையிலும் இயங்கி வருகின்றன. கிருஷ்ணா படேல் சமாஜவாதியுடனும், அனுப்ரியா படேல் பாஜகவுடனும் கூட்டணி வைத்துள்ளனா். தற்போதைய உ.பி. பேரவையில் அனுப்ரியா பிரிவுக்கு 9 எம்எல்ஏக்கள் உள்ளனா்.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் அவரது கட்சி உ.பி.யில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. மிா்சாபூரில் போட்டியிட்டு வென்ற அனுப்ரியா படேல் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றாா்.

ஐந்தாம் கட்டத் தோ்தலுடன் 292 இடங்களில் வாக்குப்பதிவு நிறைவடையும். எஞ்சிய 2 கட்டங்கள் மாா்ச் 3 மற்றும் 7-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →