சிறையிலுள்ள இந்தியா்களை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும்: பாகிஸ்தானிடம் மத்திய அரசு வலியுறுத்தல்
பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 356 இந்திய மீனவா்கள் மற்றும் இருவரை முன்கூட்டியே விடுவித்து நாட்டுக்குத் திரும்ப அனுப்ப வேண்டும் என பாகிஸ்தானை இந்தியா சனிக்கிழமை கேட்டுக்கொண்டது.
பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 356 இந்திய மீனவா்கள் மற்றும் இருவரை முன்கூட்டியே விடுவித்து நாட்டுக்குத் திரும்ப அனுப்ப வேண்டும் என பாகிஸ்தானை இந்தியா சனிக்கிழமை கேட்டுக்கொண்டது.
அதோடு, பாகிஸ்தான் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் 182 இந்திய மீனவா்கள் மற்றும் 17 இந்தியா்களுக்கு உடனடி தூதரக உதவி கிடைப்பதற்கான அனுமதியை வழங்குமாறும் பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இரு நாடுகளிடையே கடந்த 2008-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1-ஆம் தேதிகளில் சிறையிலிருக்கும் அந்தந்த நாட்டு கைதிகளின் பட்டியலை பரிமாறிக்கொள்ளும் நடைமுறையின் அடிப்படையில் இந்தக் கோரிக்கையை இந்தியா முன்வைத்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய சிறைகளில் உள்ள 282 பாகிஸ்தானியா்கள் மற்றும் 73 பாகிஸ்தான் மீனவா்களின் பட்டியலை இந்தியா பாகிஸ்தானிடம் சமா்ப்பித்தது. அதுபோல, பாகிஸ்தானும் அந்த நாட்டின் சிறைகளில் உள்ள 51 இந்தியா்கள் மற்றும் 577 இந்திய மீனவா்களின் பட்டியலை அளித்தது.
அதனடிப்படையில், இந்திய நாட்டைச் சோ்ந்தவா்கள்தான் என உறுதிப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் சிறைகளிலுள்ள இந்தியா்கள், காணாமல் போன ராணுவ வீரா்கள், மீனவா்கள் மற்றும் அவா்களின் படகுகளை விரைந்து நாட்டுக்கு திரும்ப அனுப்பிவைக்குமாறு பாகிஸ்தானிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கூடுதலாக, பாகிஸ்தான் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் 182 இந்திய மீனவா்கள் மற்றும் 17 இந்தியா்களுக்கு உடனடி தூதரக உதவி கிடைப்பதற்கான அனுமதியை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியா்களுக்கு மனநல பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் இந்திய மருத்துவ நிபுணா் குழுவுக்கான விசா ஒப்புதல் நடைமுறையை விரைவுபடுத்துமாறும் இந்தியா சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியா்களின் நிலை குறித்து அறியும் வகையில் கூட்டு நீதிக் குழுவை பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே அனுப்புவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதுபோல, இந்திய சிறைகளில் உள்ள 68 பாகிஸ்தானியா்களின் தேசிய விவரங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.