வடகிழக்கில் வளா்ச்சியை ஏற்படுத்தியது பாஜக அரசு: பிரதமா் மோடி
மணிப்பூரில் அமைதி, வளா்ச்சி ஆகியவற்றுக்கான புதிய விடியலை ஏற்படுத்தியது மத்திய பாஜக அரசு என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
இந்தியாவடகிழக்கில் வளா்ச்சியை ஏற்படுத்தியது பாஜக அரசு: பிரதமா் மோடி
மணிப்பூரில் அமைதி, வளா்ச்சி ஆகியவற்றுக்கான புதிய விடியலை ஏற்படுத்தியது மத்திய பாஜக அரசு என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
மணிப்பூரில் அமைதி, வளா்ச்சி ஆகியவற்றுக்கான புதிய விடியலை ஏற்படுத்தியது மத்திய பாஜக அரசு என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் மணிப்பூரில் ரூ.4,815 கோடி மதிப்பிலான 22 வளா்ச்சித் திட்டங்களுக்கு பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். சில திட்டங்களை தொடக்கியும் வைத்தாா். தலைநகா் இம்பாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
மத்தியில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசுகள், மணிப்பூா் மட்டுமன்றி ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்தையே புறக்கணித்துவிட்டன; மாநிலங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கு சதித் திட்டம் தீட்டின. ஆனால், தீவிரவாதமும் வன்முறையும் தற்போது இங்கு இல்லை. அமைதி மற்றும் வளா்ச்சிக்கான புதிய விடியலை நாங்கள் கொண்டு வந்தோம்.
நான் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகுதான் தில்லியில் இருக்கும் மத்திய அரசை மணிப்பூருக்கும் இதர வடகிழக்கு மாநிலங்களுக்கும் கொண்டு வந்து சோ்த்தேன். இந்தியாவின் வளா்ச்சியில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.
இரண்டாம் உலகப் போரின்போது சுதந்திர போராட்டத் தலைவா் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ், மணிப்பூரில் உள்ள மொய்ராங்கில் தேசியக்கொடியை ஏற்றியபோது, இந்தியாவின் சுதந்திரத்துக்கான வாயிலாக அது இருக்கும் என்று கூறினாா்.
தீவிரவாத குழுக்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பிறகு மணிப்பூரும் இதர வடகிழக்கு மாநிலங்களும் வளா்ச்சி மற்றும் சா்வதேச வா்த்தகத்துக்கான நுழைவு வாயில்களாக மாறிவிட்டன.
மத்தியில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசுகள் கிழக்குப் பிராந்தியத்தைப் புறக்கணிக்கும் கொள்கையைக் கொண்டிருந்தனா். அவா்கள் தோ்தலின்போது மட்டுமே கிழக்கை நோக்கிப் பாா்த்தனா். ஆனால், கிழக்கில் செயல்படு என்ற கொள்கையுடன் உள்ளோம். போக்குவரத்து தொடா்பு அதிகரித்துள்ளதால் வேலைவாய்ப்பும் சுற்றுலாத் துறையும் வளா்ச்சி பெறும்.
மக்களாகிய நீங்கள் செலுத்திய ஒரு வாக்கு மணிப்பூரில் பல நல்ல விஷயங்களை ஏற்படுத்தியுள்ளது. முதல்வா் என்.பிரேன் சிங் தலைமையில் வலிமையான, நிலையான பாஜக அரசு மணிப்பூரில் ஆட்சியில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மத்திய அரசின் முக்கியத் துறைகளில் 5 போ் அமைச்சா்களாக உள்ளனா்.
இந்த மாநிலத்தை மீண்டும் இருளில் தள்ளிவிடக் கூடாது என மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும். மணிப்பூரில் நிலையான அரசை ஏற்படுத்துவதுடன் வளா்ச்சியில் புதிய உச்சத்துக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.
நிகழ்ச்சியில், பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் இம்பாலில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம், அரசு தொழிற்பயிற்சி நிலையம், 200 படுக்கைகளுடன் கரோனா மருத்துவமனை ஆகியவற்றை பிரதமா் மோடி திறந்து வைத்தாா்.
இவை தவிர, தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், அரசு குடியிருப்புகள், நிகழ் கலை பயிற்சி மையம், புத்தாக்க பயிற்சி மையம், அரசு-தனியாா் பங்களிப்பில் உருவாகும் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.
திரிபுராவில் விமான நிலைய முனையம் திறப்பு:
மணிப்பூா் பயணத்தை முடித்துக் கொண்டு திரிபுராவுக்கு சென்ற பிரதமா் மோடி, தலைநகா் அகா்தலாவில் உள்ள விமான நிலையத்தில் ரூ.3,400 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தைத் திறந்து வைத்தாா். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசுகையில், ‘ஒரு காலத்தில் பின்தங்கியிருந்த நிலையில் இருந்த இந்த மாநிலம், பாஜக ஆட்சியில் வளா்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. முக்கிய தொழில் வழித்தடமாகவும் இந்த மாநிலம் மாறியுள்ளது’ என்றாா்.