முகப்பு
இந்தியா

கோவா முன்னாள் முதல்வருக்கு 'வாழ்நாள் அமைச்சர் அந்தஸ்து'

கோவா முன்னாள் முதல்வர் பிரதாப்சிங் ரானே, 50 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்த நிலையில், அவருக்கு வாழ்நாள் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 7 ஜனவரி, 2022 at 11:46 AM
கோவா முன்னாள் முதல்வர் பிரதாப்சிங் ரானே
பகிர்:

கோவா முன்னாள் முதல்வர் பிரதாப்சிங் ரானேவுக்கு (87) வாழ்நாள் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர், தற்போது பொரியம் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த சாவந்த் இதுகுறித்து கூறுகையில், "கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் முன்னாள் சபாநாயகருமான ரானேவுக்கு, நிரந்தர அமைச்சர் அந்தஸ்து வழங்க அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. 50 ஆண்டு காலமாக, கோவா சட்டப்பேரவையில் உறுப்பினராக உள்ளதால், அவரை கெளரவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

50 ஆண்டுகளாக எம்எல்ஏக்களாக பதவி வகிப்பவர்கள், முன்னாள் முதல்வர்கள் அல்லது முன்னாள் சபாநாயகர்களுக்கு, இந்த அந்தஸ்து எதிர்காலத்தில் வழங்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது" என்றார்.

Advertisement

கடந்த 1987 முதல் 2007 வரை, பல்வேறு சமயங்களில், ரானே முதல்வராக பொறுப்பு வகித்துள்ளார். ரானேவுக்கு வாழ்த்து தெரிவித்த அவரது மகனும் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சருமான விஸ்வஜீத், "எனது தந்தை பிரதாப்சிங் ராவ்ஜி ரானேவுக்கு வாழ்நாள் அமைச்சர் அந்தஸ்து வழங்கியதற்காக முதல்வருக்கும் ஒட்டுமொத்த அமைச்சரவைக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

முதல்வராகவும், சபாநாயகராகவும், எம்எல்ஏவாகவும் பொதுவாழ்க்கையில் 50 ஆண்டுகாலமாக பணியாற்றிய அவரை கெளரவிக்க இதைவிட பெரிய வழி இல்லை" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.