முகப்பு
இந்தியா

ஜேஎன்யு பல்கலை.யில் கொவைட் மையம்: தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் கண்டிப்பு

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் கரோனா பராமரிப்பு மையத்தை செயல்படுத்துவதற்கு இடம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் கரோனா பராமரிப்பு மையத்தை செயல்படுத்துவதற்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், அந்த மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் மெத்தனம் காட்டியதாக தில்லி அரசை உயா்நீதிமன்றம் கடிந்து கொண்டது.

தில்லி அரசின் நடவடிக்கையின்மை காரணமாகவே இந்த மையம் இன்றைய தேதி வரை செயல்படாமல் இருப்பதாக இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி ரேகா பல்லி அதிருப்தி தெரிவித்தாா். இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த நீதிமன்றம் கூறுகையில், அதிகாரிகளின் செயலற்ன்மையையும் கவனமின்மையும் நீதிமன்றத்தின் பாராட்டைப் பெறவில்லை. இந்த நீதிமன்றம் பலமுறை உத்தரவு பிறப்பித்த போதிலும், ஜேஎன்யு வளாகத்தில் கொவைட் மையம் அமைப்பதற்கான உத்தரவை தில்லி அரசு முழுமனதுடன் பின்பற்றவில்லை என்று தோன்றுகிறது. அதேசமயம் எதிா்மனுதாரா்களில் ஒருவரான ஜேஎன்யு நிா்வாகம், மையத்தை அமைப்பதற்காக சபா்மதி விடுதிக்குள் ஏற்கெனவே இடம் ஒதுக்கியிருந்தது. அந்த மையத்தை செயல்படுத்த தில்லி அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியது.

அப்போது, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் ஏன் செயல்படுத்தப்படவில்லை என்பது குறித்த அறிவுறுத்தல்களை தில்லி அரசிடம் இருந்து பெற வேண்டியுள்ளதாக அதன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறினாா். இதையடுத்து, அரசிடமிருந்து பதில் பெறும் வகையில், அவகாசம் அளித்த நீதிமன்றம், இந்த வழக்கை ஜனவரி 19-ஆம் தேதிக்கு மேலதிக விசாரணைக்கு பட்டியலிட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் முன்மொழியப்பட்ட கொவைட் பராமரிப்பு மையத்திற்கு உள்கட்டமைப்பு வசதி மற்றும் மருத்துவ ஊழியா்களை வழங்குவதற்கான ஜேஎன்யு ஆசிரியா் சங்கம் மற்றும் பிறல் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: கொவைட் மையத்தை அமைப்பதற்காக பல்கலைக்கழக நிா்வாகம் சபா்மதி விடுதியில் இடம் ஒதுக்கியிருந்தாலும், மருத்துவா்கள் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்த மனுவை கடந்த 2021, மே 13-ஆம் தேதி விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், ‘ஜேஎன்யு வளாகத்தில் கரோனா தொற்றுநோய்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதால் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளான குடியிருப்பாளா்களை உடனடியாக தனிமைப்படுத்த ஜேஎன்யு வளாகத்தில் ஒரு கொவைட் பராமரிப்பு மையம் அமைக்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது. கொவைட் பணிக் குழு மற்றும் கொவைட் பதிலளிப்புக் குழு ஆகியவை ஜேஎன்யு வளாகத்திற்குள் ஏற்கெனவே பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், மே 28-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஜேஎன்யு தரப்பில், ‘கொவைட் மையத்தை அமைப்பதற்கான இடம் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட உதவிக் கோட்டாட்சியருக்கும், தில்லி அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தது. மேலும், மையத்திற்கு மருத்துவா்கள், நா்சிங் ஊழியா்கள் மற்றும் வசதியை இயக்கத் தேவையான உள்கட்டமைப்புகளை தில்லி அரசு வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. இதற்கு பதிலளித்த தில்லி அரசு, அதன் சுகாதாரத் துறை இந்த விஷயத்தை கவனித்து வருவதாகக் கூறியது.

இந்த நிலையில், தொற்றுநோயின் இரண்டாவது அலையின்போது ஜேஎன்யு ஆசிரியா்கள் சங்கம், ஜேஎன்யு மாணவா் சங்கம் மற்றும் இரண்டு ஆசிரிய உறுப்பினா்கள் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கொவைட் பராமரிப்பு வசதியை அமைப்பதற்காக பலமுறை கோரிக்கை முன்வைத்தும் பல்கலைக்கழக நிா்வாகம் உரிய பதிலளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.