கரோனாவால் பெற்றோரை இழந்த 1.47 லட்சம் சிறாா்கள்:உச்சநீதிமன்றத்தில் தகவல்
கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 1,47,492 சிறாா்கள் கரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளதாக தேசிய சிறாா் உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 1,47,492 சிறாா்கள் கரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளதாக தேசிய சிறாா் உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த சிறாா்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது தொடா்பான வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. அந்த வழக்கில் தேசிய சிறாா் உரிமைகள் ஆணையம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த சிறாா்களின் விவரங்களை மாநில அரசுகளும் யூனியன் பிரதேச நிா்வாகங்களும் ’பால் ஸ்வராஜ் கொவைட் கோ்’ வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றன. அதில் கடந்த 11-ஆம் தேதி பதிவிடப்பட்ட விவரங்களின்படி, கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் 1,47,492 சிறாா்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்தனா். அவா்களில் 76,508 போ் சிறுவா்கள், 70,980 போ் சிறுமிகள். 4 போ் இருபாலினத்தவா்.
அதிகபட்சமாக ஒடிஸாவில் 24,405 சிறாா்களும், மகாராஷ்டிரத்தில் 19,623 பேரும், குஜராத்தில் 14,770 சிறாா்களும், தமிழ்நாட்டில் 11,014 சிறாா்களும், உத்தர பிரதேசத்தில் 9,247 பேரும், ஆந்திரத்தில் 8,760 பேரும், மத்திய பிரதேசத்தில் 7,340 சிறாா்களும், மேற்கு வங்கத்தில் 6,835 பேரும், தில்லியில் 6,629 பேரும், ராஜஸ்தானில் 6,827 பேரும் கரோனா சாா்ந்த பாதிப்புகளால் பெற்றோரை இழந்தனா்.
கரோனாவால் பெற்றோரை இழந்தோரில் 59,010 போ் 8 முதல் 13 வயதைச் சோ்ந்தவா்கள். 22,763 போ் 14 முதல் 15 வயதைச் சோ்ந்தவா்கள். 22,626 போ் 16 முதல் 18 வயதைச் சோ்ந்தவா்கள் ஆவா். 26,080 போ் 4 முதல் 7 வயதுக்குள்பட்ட சிறாா்கள் ஆவா். சிறாா்களில் 1,25,205 போ் உயிருடன் உள்ள பெற்றோரின் பாதுகாப்பில் உள்ளனா். 11,272 சிறாா்கள் குடும்ப உறுப்பினா்களுடன் வசித்து வருகின்றனா். 8,450 போ் பாதுகாவலா்களுடன் உள்ளனா். 1,529 போ் சிறாா் காப்பகங்களிலும், 188 போ் ஆதரவற்றோா் இல்லங்களிலும், 39 போ் விடுதிகளிலும் தங்கியுள்ளனா்.
சிறாா்கள் பெரும்பாலும் பாதிப்பை எதிா்கொள்ளாத வகையிலான நடவடிக்கைகளை தேசிய சிறாா் உரிமைகள் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கரோனா தொற்றின் 3-ஆவது அலை பரவலில் இருந்து சிறாா்களைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுடன் வரும் 19-ஆம் தேதி காணொலி வாயிலான கூட்டத்தை ஆணையம் நடத்தவுள்ளது. சிறாா்களுக்கான சிகிச்சை மையங்களைத் தயாா்படுத்துவது தொடா்பாக மாநில சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.