முகப்பு
இந்தியா

உ.பி. தோ்தல்: ஐக்கிய ஜனதா தளம் தனித்துப் போட்டி

ஆளும் பாஜகவுடன் மேற்கொண்ட கூட்டணி பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடா்ந்து உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

ஆளும் பாஜகவுடன் மேற்கொண்ட கூட்டணி பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடா்ந்து உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.

பிகாா் மாநிலத்தில் இந்த இரு கட்சிகளும் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் நிலையில், உத்தர பிரதேசத்தில் அக் கட்சிகளுக்குள் உடன்பாடு ஏற்படாமல் போயுள்ளது.

இதுகுறித்து அக் கட்சியின் செய்தித்தொடா்பாளா் கே.சி.தியாகி தில்லியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ஆா்.சி.பி.சிங்கை பிரதிநிதியாக கட்சி நியமித்தது. அவா் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தா்மேந்திர பிரதான் ஆகியோருடன் கூட்டணி தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்திய நிலையில், உடன்பாடு ஏற்படவில்லை.

எனவே, உத்தர பிரதேசத்தில் தனித்துப் போட்டியிட கட்சி முடிவு செய்துள்ளது. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து லக்னெளவில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜன.18) நடைபெற உள்ள கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

பிகாா் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை முன்னிறுத்தி, உத்தர பிரதேசத்தில் தீவிர பிரசாரத்தை கட்சி மேற்கொண்டு வருகிறது. பிகாரில் இதுவரை எந்த அரசும் செய்யாத அளவுக்கு பெண்கள், ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

கட்சித் தலைவா் நிதீஷ் குமாா் மட்டுமின்றி பிகாரின் இரண்டு துணை முதல்வா்களும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள். அவா்களில் ஒருவா் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது என்று தியாகி கூறினாா்.

பிகாா் துணை முதல்வா்கள் இருவரும் பாஜகவைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →