மும்பையில் 20 மாடி கட்டடத்தில் தீ: 15 பேர் காயம்
மும்பையில் 20 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
மும்பையில் 20 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
தீ விபத்து பற்றி மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது:
"காந்தி மருத்துவமனை எதிரே கமலா கட்டடத்தில் காலை 7 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தரைதளம் மற்றும் 20 மாடி கொண்ட கட்டடத்தில் 18-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
13 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இது 3-ம் நிலை தீ விபத்து.
இதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகேவுள்ள பாட்டியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த 15 பேரில் 12 பேர் பொதுப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற மூன்று பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர்.
தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார் அவர்.
5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. மும்பை மாநகராட்சி மேயர் கிஷோரி பட்னேகர் சம்பவ இடத்தில் உள்ளார்.