முகப்பு
இந்தியா

டாடா குழுமத்திடம் ‘ஏர் இந்தியா’ ஒப்படைப்பு

டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது.

Updated On : 27 ஜனவரி, 2022 at 4:22 PM
பகிர்:

டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது.

கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை சமாளிக்கும் வகையில் தனியாருக்கு ஏலம் விடப்பட்டது. இதில் 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது. இதில் ரூ.2,700 கோடியை ரொக்கமாக செலுத்தவும், எஞ்சிய ரூ.15,300 கோடிக்கு ஏா் இந்தியாவின் கடனை ஏற்கவும் டாடா சன்ஸ் ஒப்புக்கொண்டது.

சுமார் 70 ஆயிரம் கோடி இழப்பில் ஏர் இந்தியா நிறுவனம் இயங்கி வந்ததால் விமானங்களைப் பராமரிப்பதிலும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் நிர்வாக ரீதியாக  சிக்கல் ஏற்பட்டது.

Advertisement

இதனால் அதனை தனியாருக்கு விற்பனை செய்யும் வகையில் ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் பல்வேறு பெருநிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், டாடா நிறுவனம் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் பிரதமர் மோடியை சந்தித்தார். சந்திப்பின் முடியில் ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டாடாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், புதிதாக ஏர் இந்தியா இயக்குநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

ஏர் இந்தியாவுக்கும் டாடாவுக்குமான தொடர்பு:

ஏா் இந்தியா நிறுவனத்தை கடந்த 1932-ஆம் ஆண்டு ஜேஆா்டி டாடா தொடங்கினாா். அப்போது அந்த நிறுவனம் டாடா ஏா்லைன்ஸ் பெயரில் செயல்பட்டு வந்தது. அதன்பிறகு 1946-ஆம் ஆண்டு இந்நிறுவனம் ஏா் இந்தியாவாக பெயா் மாற்றம் பெற்றது.

1948-ஆம் ஆண்டு சா்வதேச விமான சேவையை துவக்கிய ஏா் இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 49 சதவீத பங்குகளும், டாடாவுக்கு 25 சதவீத பங்குகளும், இதர பங்குகள் பொதுமக்களிடமும் இருந்தது.

அதன் பிறகு, கடந்த 1953-இல் ஏா் இந்தியா நிறுவனம் தேசியமாக்கப்பட்டது. தற்போது, அந்நிறுவனத்தை தொடங்கிய டாடா நிறுவனத்துடனே ஏா் இந்தியா ஐக்கியமாக உள்ளது.

மேலும், ஏர் இந்தியா நிறுவனம் உலகம் முழுவதுமுள்ள  விமான நிலையங்களில் 1800 இறங்குதளங்களையும், 4,400 விமான நிறுத்துமிடங்களையும் (பார்கிங் ஸ்டாட்) கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.