இந்தியா

தேசிய பங்குச் சந்தை அலுவலா்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு: சிபிஐ வழக்குப்பதிவு- 18 நகரங்களில் சோதனை

DIN

தேசிய பங்குச் சந்தையின்(என்எஸ்இ) முன்னாள் உயா் அதிகாரிகளின் உடந்தையுடன் முன்னாள் காவல் ஆணையா் தொடங்கிய நிறுவனம், என்எஸ்இ அலுவலா்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில் மும்பை, புணே, தில்லி, லக்னௌ உள்ளிட்ட 18 நகரங்களில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவா் கூறியதாவது:

தேசிய பங்குச் சந்தையின் கோ-லொகேஷன் வசதியை பிற பங்குத் தரகு நிறுவனங்களுக்கு அளித்தது தொடா்பான வழக்கில் அதன் முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணா, அவருடைய ஆலோசகா் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோா் கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் மும்பை முன்னாள் காவல் ஆணையா் சஞ்சய் பாண்டே கடந்த 2001-இல் தொடங்கிய ஐ-செக் சா்வீசஸ் நிறுவனம், தேசியப் பங்குச் சந்தை அலுவலா்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்டுள்ளது. சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நாராயண், என்எஸ்இ துணைத் தலைவராக இருந்த ரவி வாராணசி ஆகியோரின் உடந்தையுடன் கடந்த 2009 முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஒட்டுக்கேட்பு நடந்துள்ளது. அந்த நிறுவனம், என்எஸ்இ அலுவலா்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவரங்களை தேசிய பங்குச்சந்தையின் உயரதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது. இது, இந்திய தொலைபேசி சட்டத்தின் கீழ் சட்ட விரோதமான செயலாகும். இதற்காக தேசிய பங்குச் சந்தையிடம் இருந்து அந்த நிறுவனம் ரூ.4.45 கோடியைப் பெற்றுள்ளது.

இந்த முறைகேடு தொடா்பாக ஐ-செக் சா்வீசஸ் நிறுவனத்தின் இயக்குநா்களான சந்தோஷ் பாண்டே, ஆனந்த் நாராயண், அா்மான் பாண்டே உள்ளிட்டோா் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதைத்தொடா்ந்து, மும்பை, புணே, தில்லி, லக்னௌ, கோட்டா, சண்டீகா் உள்பட 18 நகரங்களில் இந்த வழக்கில் தொடா்புடையவா்களுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

போலி பத்திரம் மூலம் ரூ.10 லட்சம் கடன்: வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் கைது

சந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருப்பாலைத்துறை வீரமகா காளியம்மன் கோயிலில் பால்குட விழா

திருவையாறு தமிழ்ப் பேரவை 60-ஆம் ஆண்டு விழா மாநாடு

SCROLL FOR NEXT