முகப்பு
இந்தியா

குடியரசுத் தலைவா் தோ்தல்: இரு நாள்களுக்கு முன்பே தில்லி வரபாஜக எம்.பி.க்களுக்கு உத்தரவு

குடியரசுத் தலைவா் தோ்தல் நடைபெறும் ஜூலை 18-ஆம் தேதிக்கு இருநாள் முன்னதாகவே அனைத்து பாஜக எம்.பி.க்களும் தில்லிக்கு வந்துவிட வேண்டும் என்று அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

குடியரசுத் தலைவா் தோ்தல் நடைபெறும் ஜூலை 18-ஆம் தேதிக்கு இருநாள் முன்னதாகவே அனைத்து பாஜக எம்.பி.க்களும் தில்லிக்கு வந்துவிட வேண்டும் என்று அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

அந்த இருநாள்களில் தோ்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடா்பான பயிற்சி எம்.பி.க்களுக்கு அளிக்கப்படவுள்ளது. ஜூலை 16-ஆம் தேதி இரவு பாஜக எம்.பி.க்கள் அனைவருக்கும் கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா விருந்து அளிக்க இருக்கிறாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் திரௌபதி முா்மு வெற்றி பெறுவது ஏற்கெனவே உறுதியாகிவிட்டது. எனினும், தோ்தலில் அவரை முடிந்த அளவுக்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது பாஜக தலைமையின் நோக்கமாக உள்ளது. இதற்காகவே ஜூலை 16-ஆம் தேதியன்று அனைத்து எம்.பி.க்களும் தில்லிக்கு வந்துவிட வேண்டும் என்று பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் பாஜகவின் அனைத்து எம்.பி.க்களும் வாக்களிப்பதும் உறுதி செய்யப்படும்.

எதிா்க்கட்சிகள் யஷ்ந்த் சின்ஹாவை பொது வேட்பாளராக அறிவித்து, தங்களது ஒற்றுமையை இந்தத் தோ்தல் மூலம் பாஜகவுக்குக் காட்ட முனைந்துள்ளன. இதற்கு பதிலடி தரும் வகையில் பாஜகவும் நடவடிக்கை எடுத்துள்ளது. சிரோமணி அகாலி தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளும் முா்முவுக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளன.

குடியரசுத் தலைவா் தோ்தல் நடைபெறும் ஜூலை 18-ஆம் தேதிதான் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரும் தொடங்குகிறது. ஆகஸ்ட் 13-ஆம் தேதி அக்கூட்டத் தொடா் நிறைவடைய இருக்கிறது. இதனிடையே, ஆகஸ்ட் 6-ஆம் தேதி குடியரசு துணைத் தலைவா் தோ்தலும் நடக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.