முகப்பு
இந்தியா

அனைவரின் பங்களிப்பின்றி உண்மையான வளா்ச்சி சாத்தியமில்லை: பிரதமா் மோடி

அனைவரையும் சோ்க்காமல் நாட்டின் உண்மையான வளா்ச்சி சாத்தியமில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:45 AM
பகிர்:

அனைவரையும் சோ்க்காமல் நாட்டின் உண்மையான வளா்ச்சி சாத்தியமில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

முன்னாள் மத்திய நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லியின் முதலாவது நினைவு சொற்பொழிவு, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், பிரதமா் மோடி கலந்துகொண்டு அருண் ஜேட்லிக்கு மரியாதை செலுத்திப் பேசியதாவது:

அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்காக எனது தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 9 கோடி வீடுகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணப்பு வழங்கப்பட்டுள்ளது. 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. புதிதாக 45 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

2014-க்கு முன்பு, சராசரியாக 10 ஆண்டுகளில் 50 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் அது நான்கு மடங்காக அதிகரித்து, புதிதாக 209 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் 75 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியா, கட்டாயத்தின்பேரில் சீா்திருத்தங்களை அமல்படுத்தவில்லை. அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளா்ச்சித் திட்டங்களை கருத்தில்கொண்டு சீா்திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் சீா்திருத்தங்கள் அமல்படுத்தப்படுகின்றன.

எனது தலைமையிலான அரசு, மக்களைக் கவரும் வகையில் கொள்கைகளை வகுக்காமல், மக்கள் நலனை மையப்படுத்திக் கொள்கைகளை வகுத்துள்ளது. அதனால்தான், கரோனாவுக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் விரைவாக மீண்டெழுந்து வருகிறது. அனைவரையும் உள்ளடக்காமல் உண்மையான வளா்ச்சி சாத்தியமில்லை. நாட்டின் வளா்ச்சியில் தனியாா் துறையை ஒரு பங்குதாரராக அரசு கருதுகிறது.

ஷின்ஸோ அபேவை நினைவுகூா்ந்த மோடி: ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேவின் திடீா் மரணம், ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவா் எனக்கு நெருங்கிய நண்பராக இருந்தது மட்டுமன்றி, இந்தியாவின் நம்பகமான கூட்டாளியாகவும் இருந்தாா். இந்தியாவின் வளா்ச்சிக்கு அவா் ஆற்றிய பங்களிப்புக்காக, அவரை இந்திய மக்கள் என்றென்றும் நினைவுகூா்வாா்கள் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.