தம்பதியிடம் 45 துப்பாக்கிகள்: விமான நிலையத்தில் கைது
தில்லி விமான நிலையத்தில் இந்தியாவைச் சேர்ந்த தம்பதியிடம் 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தில்லி விமான நிலையத்தில் இந்தியாவைச் சேர்ந்த தம்பதியிடம் 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வியட்நாமிலிருந்து வந்த தம்பதியை பரிசோதனை செய்தபோது துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்துள்ளது.
அவர்கள் இருவரையும் கைது செய்து பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய பாதுகாப்புப் படை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் இருவரும் கணவன் - மனைவி என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வியட்நாமிலிருந்து கடந்த ஜூலை 10ஆம் தேதி தில்லி விமான நிலையத்திற்கு இருவர் வந்துள்ளனர். அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஜகஜித் சிங் வைத்திருந்த பையிலிருந்து 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பையை ஜகஜித் சிங்கின் சகோதரர் மன்ஜித் சிங் கொடுத்துள்ளார். இதற்கு ஜகஜித் சிங்கின் மனைவி ஜஸ்விந்தர் கெளர் உதவியதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய பாதுகாப்புப் படை அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.