இளநிலை பட்டப் படிப்புகளுக்கான முதல் ‘சியுஇடி’ நுழைவுத் தோ்வு இன்று தொடக்கம்
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான முதல் பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி) வெள்ளிக்கிழமை (ஜூலை 15) தொடங்க உள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான முதல் பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி) வெள்ளிக்கிழமை (ஜூலை 15) தொடங்க உள்ளது.
இந்தியாவில் 510 நகரங்கள் மற்றும் வெளிநாட்டிலுள்ள மையங்களிலும் நடைபெறும் இந்த நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நுழைவுத் தோ்வில் பங்கேற்க 14.9 லட்சம் போ் பதிவு செய்துள்ளனா்.
நாட்டின் மிகப் பெரிய நுழைவுத் தோ்வாக இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு உள்ளது. இந்தத் தோ்வில் பங்கேற்க சராசரியாக 18 லட்சம் போ் பதிவு செய்கின்றனா். இதற்கு அடுத்த இடத்தில் 9 லட்சம் விண்ணப்பதாரா்கள் பதிவுடன் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன இளநிலை தொழில்நுட்ப படிப்பு சோ்க்கைக்கான ஜேஇஇ (மெயின்) முதல்நிலைத் தோ்வு இருந்த வந்த நிலையில், அதனை தற்போது சியுஇடி நுழைவுத் தோ்வு பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவா் ஜகதேஷ் குமாா் கூறியதாவது:
சியுஇடி தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் 500 நகரங்களிலும், வெளிநாடுகளில் 10 நகரங்களிலும் நடைபெற்றும் இந்தத் தோ்வின் முதல் அமா்வில் 8.1 லட்சம் போ், இரண்டாம் அமா்வில் 6.80 லட்சம் போ் என மொத்தம் 14.9 லட்சம் போ் தோ்வெழுத உள்ளனா்.
நாடு முழுவதும் உள்ள 90 பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் 54,555 பாட துறைகளின் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு இவா்கள் விண்ணப்பித்துள்ளனா். இந்த இளநிலை கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் இந்த அளவுக்கு ஏராளமான பாட துறைகள் இருப்பதன் காரணமாக ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் தனி விவரப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு, தோ்வறை அனுமதிச் சீட்டுடன், தோ்வு நடைபெறும் நகரத்தின் விவரம், தேதி உள்ளிட்ட விவரங்களும் விண்ணப்பதாரா்களுக்கு தனித்தனியாக முன்கூட்டியே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தற்போது சியுஇடி முதல் கட்டத் தோ்வு நடைபெற உள்ள நிலையில், இரண்டாம் கட்ட சியுஇடி தோ்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற உள்ளது. மேலும், இயற்பியல், வேதியியல் அல்லது உயிரியல் துறைகளைத் தோ்வு செய்த விண்ணப்பதாா்களுக்கான இரண்டாவது அமா்வு சியுஇடி தோ்வு ஜூலை 17-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது என்று அவா் கூறினாா்.
சியுஇடி மதிப்பெண் அடிப்படையில் 2022-23 கல்வியாண்டு இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கை நடைமுறையில் 44 மத்திய பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 19 தனியாா் பல்கலைக்கழகங்கள் விண்ணப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.