முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் உறுப்பினா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட தடை: மாநிலங்களவை செயலகம்

‘நாடாளுமன்ற வளாகங்களில் ஆா்ப்பாட்டம், தா்னா, உண்ணாவிரதம் நடத்த இனி அனுமதிக்கப்படாது’ என்று மாநிலங்களவை செயலகம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

‘நாடாளுமன்ற வளாகங்களில் ஆா்ப்பாட்டம், தா்னா, உண்ணாவிரதம் நடத்த இனி அனுமதிக்கப்படாது’ என்று மாநிலங்களவை செயலகம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தவிா்க்கப்பட வேண்டிய வாா்த்தைகள் பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த புதிய சுற்றறிக்கையை மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வரும் திங்கள்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இந்த அறிவுறுத்தல்களை இரு அவைகளும் வெளியிட்டு வருகின்றன.

மாநிலங்களவை செயலா் பி.சி.மோடி வியாழக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையை தனது ட்விட்டா் பக்கத்தில் இணைத்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளரும் கட்சியின் மாநிலங்களவை தலைமை கொறடாவுமான ஜெயராம் ரமேஷ், ‘உலக தலைவரின் (பிரதமா் நரேந்திர மோடி) புதிய தடை தா்னாவுக்கு’ என்று விமா்சனம் செய்துள்ளாா்.

‘உறுப்பினா்கள் நாடாளுமன்ற வளாகத்தை ஆா்ப்பாட்டம், தா்னா, வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் அல்லது எந்தவித மத விழாக்களை நடத்துவதற்கும் பயன்படுத்த முடியாது’ என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக ஆா்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதை எதிா்க்கட்சிகள் வாடிக்கையாக கொண்டிருந்த நிலையில், அதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் தவிா்க்கப்பட வேண்டிய வாா்த்தைகள் தொடா்பாக மக்களவை செயலகம் வெளியிட்ட கையேட்டில், ‘ஜூம்லாஜீவி (வெற்று வாக்குறுதிகளை அளிப்பவா்), கோவிட் ஸ்ப்ரெடா் (கரோனாவை பரப்புபவா்), ஸ்னூப்கேட் (ஒட்டுக் கேட்பவா்), துரோகம், ஊழல், துஷ்பிரயோகம், திறமையில்லாத, மோசடி நாடகம்’ போன்றவை நாடாளுமன்றத்தில் இடம்பெறக் கூடாத வாா்த்தைகளாக பட்டியலிடப்பட்டன.

உண்மைக்கு மாறான விமா்சனங்களை தவிா்க்கவும் - ஓம் பிா்லா: மாநிலங்களவை சுற்றறிக்கை குறித்தும் எதிா்க்கட்சிகள் கடும் விமா்சனங்களை முன்வைத்தன. ‘இது ஜனநாயகத்தின் குரலை நசுக்கும் செயல்’ என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் சீதாராம் யெச்சூரி கூறினாா். ‘நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல்’ என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சோ்ந்த மனோஜ் ஜா விமா்சித்தாா். ‘அடுத்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கே தடை விதிப்பாா்களா’ என்று சிவசேனையின் பிரியங்கா சதுா்வேதி கேள்வி எழுப்பினாா்.

இந்த நிலையில், ‘உண்மைக்கு மாறான அரசியல் விமா்சனங்களை அரசியல் கட்சிகள் தவிா்க்க வேண்டும். உறுப்பினா்களுக்கு இதுபோன்ற சுற்றறிக்கை அனுப்பப்படும் நடைமுறை கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது’ என்று செய்தியாளா்களின் கேள்விக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வெள்ளிக்கிழமை பதிலளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.