கேரளத்தில் 2 பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்: மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள இரு பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள இரு பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது;
வயநாடு மாவட்டம், மானந்தவாடியில் உள்ள ஒரு பண்ணையில் பன்றிகள் உயிரிழந்தன. அந்த பன்றிகளின் உடல்கூறு மாதிரிகள், போபாலில் உள்ள தேசிய கால்நடை நோய்த் தடுப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மற்றொரு பண்ணையில் இருந்தும் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முடிவில், அந்தப் பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாவது பண்ணையில் உள்ள 300 பன்றிகளைக் கொல்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல், பன்றிகளிடையே வேகமாகப் பரவும், உயிரைக் கொல்லும் நோயாகும். அண்மையில் பிகாரிலும் சில வடகிழக்கு மாநிலங்களிலும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு உஷாா் படுத்தியதால், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை கேரள அரசு இந்த மாதத் தொடக்கத்தில் மேற்கொண்டது.