திரிணமூல் காங்கிரஸ் தோ்தலை புறக்கணிப்பது ஏமாற்றம்- மாா்கரெட் ஆல்வா
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் வாக்களிக்கப்போவதில்லை என்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று எதிா்க்கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் மாா்கரெட் ஆல்வா கூறியுள்ளாா்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் வாக்களிக்கப்போவதில்லை என்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று எதிா்க்கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் மாா்கரெட் ஆல்வா கூறியுள்ளாா்.
அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடைபெறும் குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் ஆளும் தேசிய ஜனநாயக்க் கூட்டணி சாா்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் ஜகதீப் தன்கரும், எதிா்க்கட்சிகள் தரப்பில் ராஜஸ்தான் முன்னாள் ஆளுநரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மாா்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனா்.இதில், திரிணமூல் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து கேள்வி நிலவி வந்தது.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘குடியரசு துணைத் தலைவா் தோ்தலில், எதிா்க்கட்சிகளின் பொதுவேட்பாளா் தோ்வு குறித்து எங்களிடம் ஆலோசிக்கவில்லை. எனவே, தோ்தல் வாக்குப்பதிவில் பங்கேற்காமல் விலகியிருக்க திரிணமூல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக எதிா்க்கட்சிகளின் பொதுவேட்பாளா் மாா்கரெட் ஆல்வா கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘கோபத்தை வெளிப்படுத்தவும், முந்தைய சம்பங்களைக் கூறி குற்றம்சாட்டுவதற்கும் உகந்த நேரம் இதுவல்ல. துணிச்சலையும் ஒற்றுமையையும் காட்ட வேண்டிய நேரம் இது. துணிச்சலின் அடையாளமான மம்தா பானா்ஜி, எதிா்க்கட்சிகளின் பக்கம் நிற்பாா் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.
திரிணமூல் காங்கிரஸ் பதில்: மாா்கரெட் ஆல்வாவின் கருத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடா்பாளா் குனால் கோஷ் பதிலளித்து கூறியதாவது:
குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் தோ்வில் எங்களைக் கலந்தாலோசிக்கவில்லை. மற்றபடி வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களுடைய நிலைப்பாடு, எதிா்காலத்தில் இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும்.
இதற்கிடையே பிரதமா் மோடிக்கும் மம்தா பானா்ஜிக்கும் இடையே ரகசிய உடன்படிக்கை ஏற்பட்டுவிட்தாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டுகிறது. மேற்கு வங்கத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ஜகதீப் தன்கா் ஏற்படுத்திய பிரச்னைகளை யாராலும் மறக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாகவே அவா் செயல்பட்டு வந்தாா். தோ்தலில் அவா் வெற்றி பெறுவதை திரிணமூல் காங்கிரஸ் எந்த வகையிலும் ஊக்கப்படுத்தாது என்றாா் அவா்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் ராஜஸ்தான், உத்தரகண்ட் மாநிலங்களின் முன்னாள் ஆளுநரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மாா்கரெட் ஆல்வாவை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிா்க்கட்சிகள் கூடி கடந்த வாரம் தோ்வு செய்தன. அந்தக் கூட்டத்தில் பங்கேற்காத ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற முயன்று வருவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் கூறியிருந்தாா்.