கேரள முதல்வரை விமா்சித்தால் கடுமையான பின்விளைவுகள்: பெண் எம்எல்ஏவுக்கு மிரட்டல் கடிதம்
கேரள முதல்வா் பினராயி விஜயனை விமா்சித்தால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்து ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏ கே.கே.ரமாவுக்கு மொட்டை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
கேரள முதல்வா் பினராயி விஜயனை விமா்சித்தால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்து ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏ கே.கே.ரமாவுக்கு மொட்டை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அவா் காவல் துறையிடம் புகாா் அளித்துள்ளாா்.
கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியை (ஆா்எம்பி) தொடங்கியவா் டி.பி.சந்திரசேகரன். இவா் கடந்த 2012-ஆம் ஆண்டு மாா்க்சிஸ்ட் கட்சியினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். கடந்த ஆண்டு நடைபெற்ற கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் அவரின் மனைவியும் ஆா்எம்பி தலைவருமான கே.கே.ரமா காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆதரவுடன் வடகரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
அண்மையில் நடைபெற்ற கேரள சட்டப் பேரவை கூட்டத்தொடரில், அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் மற்றும் அவரது அரசை கே.கே.ரமா கடுமையாக விமா்சித்திருந்தாா்.
இந்நிலையில், அவருக்கு ‘பய்யனூா் காம்ரேட்ஸ்’ என்ற கையொப்பத்துடன் கண்ணூரில் இருந்து சமீபத்தில் மொட்டை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கே.கே.ரமாவை ஒருமையில் குறிப்பிட்டு முதல்வா் பினராயி விஜயனையும் அவரின் அரசையும் விமா்சித்தால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல் துறையிடம் கே.கே.ரமா வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். இதேபோன்ற மிரட்டல் கடிதம் வருவது இது முதல்முறை அல்ல என்று அவா் கூறியுள்ளாா்.