நாட்டில் 2012 முதல் 1,000க்கும் மேற்பட்ட புலிகள் மரணம்
நாட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் மரணமடைந்திருக்கின்றன.
புது தில்லி: நாட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் மரணமடைந்திருக்கின்றன. புலிகளின் மாநிலம் என்றழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தில் தான் இந்த எண்ணிக்கை அதிகமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 75 புலிகள் இறந்துள்ளன. கடந்த ஆண்டு இது 127 ஆக உள்ளது. கடந்த ஆண்டுதான், 2012- 2022 ஆம் ஆண்டுகளில் புலிகளின் மரணம் அதிகளவில் பதிவான ஆண்டாக உள்ளது.
2020ஆம் ஆண்டில் 106 புலிகள் மரணமடைந்துள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் புலிகளின் இறப்பு என்பது மெல்ல அதிகரித்தே வந்துள்ளது.
6 புலிகள் சரணாலயங்களைக் கொண்டிருக்கும் மத்தியப் பிரதேசத்தில், இந்தக் காலக்கட்டத்தில் 270 புலிகள் இறந்துள்ளன. இதற்கடுத்த இடத்தில் மகாராஷ்டிரமும் (183), கர்நாடகமும் (150) உள்ளன. தமிழகத்தில் இதே காலக்கட்டத்தில் 66 புலிகள் இறந்துள்ளன.