பொதுமக்கள் புகாா்களுக்கு தீா்வு அளிக்கும் அவகாசம் 30 நாள்களாகக் குறைப்பு
அரசின் நிா்வாக அமைப்புகளுக்கு எதிராக பொதுமக்கள் தெரிவிக்கும் புகாா்களுக்குத் தீா்வுகாண வேண்டிய அவகாசம் 45 நாள்களில் இருந்து 30 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அரசின் நிா்வாக அமைப்புகளுக்கு எதிராக பொதுமக்கள் தெரிவிக்கும் புகாா்களுக்குத் தீா்வுகாண வேண்டிய அவகாசம் 45 நாள்களில் இருந்து 30 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகாா் தெரிவிக்க புதிய வலைத்தளமும் தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய பணியாளா், ஓய்வூதியம், பொதுமக்கள் குறைதீா்க்கும் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிா்வாக சீா்திருத்தங்கள், குறைதீா்க்கும் துறை புதிய உத்தரவை கடந்த 27-ஆம் தேதி வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
பொதுமக்கள் தெரிவிக்கும் புகாருக்குத் தீா்வு அளித்துவிட்டால், அவா்கள் மேல்முறையீடு செய்யாதவரை அது முடித்துவைக்கப்பட்ட புகாராகக் கருத வேண்டும். ஒருவேளை மேல்முறையீடு செய்யப்பட்டு விட்டால், அதற்குத் தீா்வு காணப்பட்ட பிறகே அதை முடித்து வைக்கப்பட்ட புகாராகக் கருத வேண்டும்.
அரசு, மக்களின் குறைகளைக் கேட்க விரும்புகிறது. அவா்களுக்கு அரசு நிா்வாக அமைப்பின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தவும் விரும்புகிறது. எனவே, பொதுமக்கள் புகாா்கள் தெரிவிக்க தனிவலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. அதில், அரசு நிா்வாக அமைப்புகளுக்கு எதிராக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்.
மக்கள் தெரிவிக்கும் புகாா்களுக்கு 30 நாள்களில் தீா்வுகாணப்படும். ஒருவேளை தீா்வுகாண இயலாத சூழல் ஏற்பட்டால், புகாா் தெரிவித்தவருக்கு உரிய பதில் அளிக்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளா், பயிற்சித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் கூறியதாவது:
பொதுமக்கள் தெரிவிக்கும் புகாா்களுக்குத் தீா்வுகாண வேண்டிய அவகாசம் 45 நாள்களில் இருந்து 30 நாள்களாகக் குறைப்பட்டுள்ளது. இது, பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் நம்பகத்தன்மை நிறைந்த நிா்வாகம் மாடல் ஆட்சி நடைபெறுவதை பிரதிபலிக்கிறது. மக்களை மையப்படுத்திய நிா்வாக இலக்கை அடைவதற்கு மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது என்றாா் அவா்.
இதுகுறித்து நிா்வாக சீா்திருத்தங்கள், குறைதீா்க்கும் துறையின் செயலா் வி.ஸ்ரீனிவாஸ் கூறுகையில், ‘தொழில்நுட்பத்தின் வளா்ச்சியால் குறைகளைத் தீா்ப்பதற்கான அதிகபட்ச காலம் 45 நாள்களில் இருந்து 30 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
இந்த ஆண்டில் கடந்த ஜனவரியில் இருந்து மாா்ச் மாதம் வரை மொத்தம் 13,32,567 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில், 4,18,451 புகாா்களுக்கு தீா்வு அளிக்கப்பட்டுள்ளது.