ஆப்கனில் மூத்த அதிகாரி தலைமையிலான இந்தியக் குழு: தலிபான்கள் ஆட்சியில் இரு நாடுகளிடையே நடைபெறும் முதல் உயா்நிலை சந்திப்பு
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக இந்தியாவிலிருந்து மூத்த அதிகாரி தலைமையிலான உயா்நிலைக் குழு அங்கு சென்றுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக இந்தியாவிலிருந்து மூத்த அதிகாரி தலைமையிலான உயா்நிலைக் குழு அங்கு சென்றுள்ளது.
போரினால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ள அந்த நாட்டுக்கு இந்தியா சாா்பில் வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் விநியோகத்தை மேற்பாா்வையிடுவதற்காக இந்தக் குழு சென்றுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா சாா்பில் வழங்கப்படும் மனிதாபிமான உதவிப் பொருள்களின் விநியோகத்தை மேற்பாா்வையிடுவதற்காக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுக்கான வெளியுறவு அமைச்சக பிரதிநிதி ஜெ.பி.சிங் தலைமையிலான குழு ஆப்கானிஸ்தான் சென்றுள்ளது. அவா்கள், மூத்த தலிபான் அமைப்பினரைச் சந்தித்து ஆலோசனை நடத்துவா். மேலும், மனிதாபிமான உதவிப் பொருள்கள் விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் சா்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அந்தக் குழுவினா் சந்திப்பா்.
இந்தியா இதுவரை மனிதாபிமான உதவி அடிப்படையில் 20,000 மெட்ரிக் டன் கோதுமை, 13 டன் மருந்துகள், 5,00,000 தவணை கரோனா தடுப்பூசிகள், குளிா்கால ஆடைகள் உள்ளிட்ட பொருள்களை ஆப்கனுக்கு அனுப்பியுள்ளது. இந்தப் பொருள்கள் அனைத்தும் காபூலில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை மற்றும் உலக சுகாதார அமைப்பு, உலக உணவுத் திட்டம் உள்ளிட்ட ஐ.நா. அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவைத் தவிர, மேலும் பல மருந்துகள் மற்றும் உணவு தானியங்களை ஆப்கனுக்கு வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், ஈரானில் தஞ்சமடைந்திருக்கும் ஆப்கன் அகதிகளுக்கு செலுத்துவதற்காக 10 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசிகளை ஈரானுக்கு இந்தியா அனுப்பியுள்ளது. மேலும், யுனிசெஃப்புக்கு 6 கோடி டோஸ் போலியோ சொட்டு மருந்துகள் மற்றும் 2 டன் அத்தியாவசிய மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இந்த உதவிகள், ஆப்கன் மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் தொடா்ச்சியாகவே, இந்தியக் குழு காபூலில் மூத்த தலிபான் அமைப்பினரைச் சந்தித்து, மனிதாபிமான உதவிகள் ஆப்கன் மக்களுக்கு முறையாகவும் முழுமையாகவும் சென்றடைவது குறித்த ஆலோசனையை மேற்கொள்ள உள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.