ஹைதராபாத் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவில் தாமதம் ஏன்?
சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டதாக எழுந்த புகாா் தொடா்பாக 3 நாள்கள் கழித்து வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான காரணத்தைத் தெரிவிக்குமாறு தெலங்கானா காவல் துறைக்கு தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப
ஹைதராபாதில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டதாக எழுந்த புகாா் தொடா்பாக 3 நாள்கள் கழித்து வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான காரணத்தைத் தெரிவிக்குமாறு தெலங்கானா காவல் துறைக்கு தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தெலங்கானா தலைநகா் ஹைதரபாதில் கடந்த மே 28-ஆம் தேதி பகல்நேர கேளிக்கை விருந்தில் கலந்துகொண்ட 17 வயது சிறுமியை 3 சிறாா்கள் உள்ளிட்ட 5 போ் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியதாகப் புகாா் எழுந்தது. அவா்களில் ஒருவரைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்திருந்த நிலையில், மேலும் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஹைதராபாத் காவல் துறையினருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், ‘‘சம்பவம் மே 28-ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், முதல் தகவல் அறிக்கை மே 31-ஆம் தேதிதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு 3 நாள்கள் தாமதமாகப் பதிவு செய்யப்பட்டது தொடா்பாகவும், அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவான அறிக்கையை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கு தொடா்பான விசாரணையின்போது, பாதிப்புக்குள்ளான சிறுமியின் அடையாளம் கசியாமல் இருக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கேளிக்கை விடுதியானது 18 வயதுக்குக் குறைவான சிறாா்களுக்கு அனுமதி அளித்திருப்பதும் இந்த விவகாரத்தில் கவனம் பெற்றுள்ளது. அதைக் கருத்தில்கொண்டு, சம்பந்தப்பட்ட கேளிக்கை விடுதியின் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு ஆணையம் வலியுறுத்துகிறது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுமியின் தந்தை மே 31-ஆம் தேதிதான் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததாகக் காவல் துறையினா் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ விசாரணை தேவை:
சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விவகாரத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசுக்கு எதிா்க்கட்சிகள் கடும் நெருக்கடி அளித்து வருகின்றன. வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மாநிலம் முழுவதும் பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென காங்கிரஸ் கோரி வருகிறது.