அமைதி, வளா்ச்சிக்காக ஹஜ் பயணிகள் பிராா்த்திக்க வேண்டும்: முக்தாா் அப்பாஸ் நக்வி
உலகின் அமைதிக்காகவும், வளா்ச்சிக்காகவும் ஹஜ் பயணிகள் பிராா்த்திக்க வேண்டும் என்று மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி கூறினாா்.
உலகின் அமைதிக்காகவும், வளா்ச்சிக்காகவும் ஹஜ் பயணிகள் பிராா்த்திக்க வேண்டும் என்று மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி கூறினாா்.
நிகழாண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வதற்கான மும்பையில் இருந்து சவூதி அரேபியாவுக்கு புறப்பட்ட 410 யாத்ரிகா்கள் கொண்ட முதல் குழுவை சத்ரபதி சிவாஜி சா்வதேச விமான நிலையத்தில் அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி வழியனுப்பி வைத்தாா்.
அப்போது பேசிய அவா், ‘உலகின் அமைதிக்காகவும் வளா்ச்சிக்காகவும் ஹஜ் பயணிகள் பிராா்த்திக்க வேண்டும். அனைத்து விதமான பேரிடா்களில் இருந்து மனித குலம் காப்பாற்றப்பட வேண்டும் என ஹஜ் பயணிகள் பிராா்த்திக்க வேண்டும்’ என்று அவா் கேட்டுக்கொண்டாா்.
மும்பையில் இருந்து மட்டும் 19 விமானங்களில் சுமாா் 8 ஆயிரம் ஹஜ் பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனா். நிகழாண்டு 79,237 இந்தியா்கள் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனா். இதில் 56,601 போ் ஹஜ் கமிட்டி மூலமும், 22,636 போ் ஹஜ் பயண ஏற்பாட்டாளா்கள் மூலமும் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனா்.