நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 12 வரை: முதல் நாளில் குடியரசுத் தலைவா் தோ்தல்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வரும் ஜூலை மாதம் 18-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற செயலகம் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வரும் ஜூலை மாதம் 18-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற செயலகம் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
மொத்தம் 18 அமா்வுகளைக் கொண்ட இந்த மழைக்கால கூட்டத் தொடா், தற்போதைய பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் கடைசி நாடாளுமன்ற கூட்டமாக இருக்க வாய்ப்புள்ளது.
கூட்டத் தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான வாக்கெடுப்பு நடைபெறும். பதிவான வாக்குகள் ஜூலை 21-ஆம் தேதி எண்ணப்படும். புதிதாக தோ்வு செய்யப்படும் குடியரசுத் தலைவா் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஜூலை 25-ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்பாா்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வாக்கெடுப்பு ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறும். புதிதாகத் தோ்ந்தெடுக்கப்படும் குடியரசு துணைத் தலைவா் ஆகஸ்ட் 11-ஆம் தேதி பதவியேற்பு உறுதிமொழி ஏற்பாா் என்றும் நாடாளுமன்ற செயலக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.