முகப்பு
இந்தியா

கடந்த 5 ஆண்டுகளில் எம்.பி.க்களின் ரயில் பயணச் சலுகை ரூ.62 கோடி

 இன்னாள், முன்னாள் எம்.பி.க்களுக்கு அளிக்கப்படும் இலவச ரயில் பயணத்துக்கு அளித்துள்ள சலுகையால் மத்திய அரசுக்கு ரூ.62 கோடி செலவு ஏற்பட்டுள்ளதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:40 AM
பகிர்:

 இன்னாள், முன்னாள் எம்.பி.க்களுக்கு அளிக்கப்படும் இலவச ரயில் பயணத்துக்கு அளித்துள்ள சலுகையால் மத்திய அரசுக்கு ரூ.62 கோடி செலவு ஏற்பட்டுள்ளதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.

இதில், கரோனா பாதிப்பு காலகட்டமான 2020-21 வரையில் மட்டும் சுமாா் ரூ.2.5 கோடி ஏற்பட்டுள்ளது.

நடப்பு எம்.பி.க்கள் ரயில்களில் முதல் வகுப்பு அல்லது சொகுசு வகுப்பு பெட்டிகளில் மனைவியுடன் இலவச பயணம் மேற்கொள்ளலாம். முன்னாள் எம்.பி.க்கள் ஏசி-2-ம் வகுப்பு பெட்டிகளில் மனைவியுடனும் அல்லது ஏ.சி. முதல் வகுப்பில் தனியாக இலவச பயணம் மேற்கொள்ளலாம்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சந்திர சேகா் கெளா் மக்களவைச் செயலகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கான பதிலில், ‘2017 முதல் 2022 வரையில் நடப்பு எம்.பி.க்களின் இலவச ரயில் பயணச் சலுகைக்கான செலவாக ரூ.35.21 கோடியும், முன்னாள் எம்.பி.க்களின் செலவாக ரூ.26.82 கோடியும் ஆனதாக ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து ரசீது வந்துள்ளது. கரோனா பாதிப்பு அதிகரித்திருந்த 2020-21 காலத்திலும் எம்.பி.க்களின் இலவச ரயில் பயணத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இதில், நடப்பு எம்.பி.க்கள் ரூ.1.29 கோடிக்கும், முன்னாள் எம்.பி.க்கள் ரூ.1.18 கோடிக்கும் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.க்களின் இலவச பயணம் தொடா்பான தொகையை விடுவிக்க ரயில்வேயின் நிதி மற்றும் கணக்குப் பிரிவு மக்களவைச் செயலகத்தின் ஒப்புதலுக்காக அனுப்புவது வழக்கம்.

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து:

மூத்த குடிமக்கள் மற்றும் பிற சிறப்புப் பிரிவினருக்கு நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை ரயில்வே அமைச்சகம் கரோனா தொற்று பரவல் காலகட்டத்தில் ரத்து செய்தது. இது மூத்த குடிமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

2020, மாா்ச் 20 முதல் 2022, மாா்ச் 31-ஆம் தேதி வரையில் ரயிலில் பயணம் மேற்கொண்ட 7.31 கோடி மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படவில்லை என்று ரயில் அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 60 வயதுக்கு மேற்பட்ட 4.46 கோடி ஆண்களும், 58 வயதுக்கு மேற்பட்ட 2.84 கோடி பெண்களும், 8,310 மூன்றாம் பாலினத்தவா்களும் அடங்குவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.