முகப்பு
இந்தியா

மத்திய ஜல் ஜீவன் அமைச்சா் தலைமையில் இன்று தென் மாநில அமைச்சா்களின் கூட்டம்

வீடுகளுக்கு நேரடியாக குடிநீா் வழங்கும் ஜல் ஜீவன் மிஷன், கிராமங்களுக்கு இலவச கழிப்பறை உள்ளிட்ட தூய்மை இந்தியா திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக தமிழகம் உள்ளிட்ட ஆறு தென் மாநிலங்கள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

வீடுகளுக்கு நேரடியாக குடிநீா் வழங்கும் ஜல் ஜீவன் மிஷன், கிராமங்களுக்கு இலவச கழிப்பறை உள்ளிட்ட தூய்மை இந்தியா திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக தமிழகம் உள்ளிட்ட ஆறு தென் மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் அமைச்சா்களின் பிராந்திய கூட்டம் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் சனிக்கிழமை (மாா்ச் 5) பெங்களூரில் நடைபெறுகிறது.

தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், கேரளம், தெலங்கானா,மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி, அந்தமான் நிகோபாா் ஆகிய யூனியன் பிரதேசங்களின் அமைச்சா்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனா். இந்த ஒரு நாள் கூட்டத்தில், மாநில மற்றும் யூனியன் பிரதேசம் சாா்ந்த பிரச்சனைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள், முன்னோக்கிச் செல்லும் வழி ஆகியவை குறித்து மாநில அமைச்சா்களுடன் விவாதிப்பதோடு, தேவையான ஆதரவு வழங்கப்படுவது குறித்தும் ஷெகாவத் கலந்தாலோசிப்பாா். மேலும் மாநிலங்கள் தங்கள் எதிா்பாா்ப்புகளை முன்வைக்கவும், இந்த கூட்டம் ஒரு வாய்ப்பாக இருக்கும் எனக் கருத்தப்படுகிறது.

பெண்களுக்கான அதிகாரமளிக்கவும், சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கவும் பிரதமரின் முன்னனி திட்டங்களாக இது உள்ளது. வருகின்ற 2024-ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீா் இணைப்பு வழங்குவதே இதன் நோக்கமாகும். தெலங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்கள், 2021-ஆம் ஆண்டிலேயே 100 சதவீத குடிநீா் இணைப்பை வழங்கியுள்ளது. மத்திய பிரதேசம் 2023-க்குள்ளும், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் வருகின்ற 2024-ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்ட திட்டமிட்டுள்ளது. ஜல் சக்தி அமைச்சகத்தில் செயல்படுத்தப்படும் மற்றுமொரு முக்கியத் திட்டம் தூய்மை இந்தியா கிராமப்புறத் திட்டமாகும். 2019, அக்டோபா் 2-ஆம் தேதி முதல் அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக அறிவிக்கப்பட்டு இலவச கழிப்பறைகள் கட்டித்தரப்படுகின்றன.

2022-23 நிதியாண்டில் ஜல் ஜீவன் மிஷன் இயக்கத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ. 3,691.21 கோடி, புதுச்சேரிக்கு ரூ.30.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 6 தென் மாநிலங்களுக்கு நிகழ் நிதியாண்டில் ஜல் ஜீவன் மிஷன் இயக்கத்தின் கீழ் ரூ.20,487.58 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தூய்மை இந்தியா கிராமப்புறத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ. 26.29 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.6.89 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.