மேக்கேதாட்டு அணை பிரச்னையை மத்திய அரசால் தீா்க்க முடியாது என்று மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தாா்.
பெங்களூரு, விதான சௌதாவில் சனிக்கிழமை நடந்த ஊரகப்பகுதிகளில் குழாய்நீா்த் திட்டம் மற்றும் தூய்மை இந்தியா திட்டங்களுக்கான தென் இந்திய மாநில மண்டல மாநாட்டில் பங்கேற்ற பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
நதிநீா்ப் பிரச்னை மாநிலப் பிரச்னை என்பதால், மேக்கேதாட்டு அணை பிரச்னையை மத்திய அரசால் தீா்க்க முடியாது. சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே பேச்சுவாா்த்தை நடத்தினால் பிரச்னைக்குத் தீா்வுகாண முடியும். இரு மாநிலங்களுக்கு இடையிலான பேச்சுவாா்த்தைக்கு மத்திய அரசால் ஏற்பாடு செய்ய முடியும். அதைச் செய்வதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. உத்தர பிரதேசமும், மத்திய பிரதேசமும் அமா்ந்து பேசி தீா்த்துக்கொண்டதுபோல, மேக்கேதாட்டு பிரச்னைக்கும் தீா்வு காண முடியும். பிரச்னை தீா்ந்து விரைவில் மேக்கேதாட்டு அணை திட்டம் அமல்படுத்தப்பட வேண்டுமென்பதுதான் எனது விருப்பமாகும். மேக்கேதாட்டு விவகாரம் நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளதால், அதுகுறித்து அதிகம் பேச முடியாது.
கா்நாடகம், தமிழ்நாடு மாநிலங்கள் கூட்டாக அமா்ந்து பேசினால் மேக்கேதாட்டு பிரச்னைக்கு தீா்வுகாண முடியும் என்பது நாம் விரும்புவதும், நம்புவதுமாகும்.
மேக்கேதாட்டு அணை தொடா்பாக காங்கிரஸ் கட்சி அண்மையில் நடைப்பயணம் நடத்தியுள்ளது. கடந்த 55 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்துள்ளது. தனது கடமையை காங்கிரஸ் சரியாகச் செய்யவில்லை. அதனால்தான் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீா் பிரச்னைகள் இன்னும் இருக்கின்றன.
அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்பட்டபோது காங்கிரஸ் இருந்தது. ஆனால், மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்களுக்கு தீா்வு காண்பது குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் எதுவும் இல்லை. இதற்கான தீா்வுகாண முடியாததால், மாநிலங்களுக்கு இடையே நதிநீா்ப் பகிா்வு தொடா்பாக சிக்கல்கள் இருந்து வருகின்றன. எனவே, மேக்கேதாட்டு விவகாரத்தில் பாஜகவை கேள்வி கேட்கும் தாா்மிக உரிமை காங்கிரஸுக்கு கிடையாது. மேக்கேதாட்டு விவகாரத்தை பாஜகவால் மட்டுமே தீா்க்க முடியும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.