நாளை தோ்தல் முடிவுகள்:கோவா காங். வேட்பாளா்களை விடுதியில் தங்கவைக்க முடிவு
கோவாவில் தொங்கு சட்டப்பேரவை அமையக்கூடும் என்று தோ்தலுக்குப் பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ள நிலையில், அந்த மாநில காங்கிரஸ் வேட்பாளா்கள் விடுதியில் தங்கவைக்கப்படவுள்ளனா்.
கோவாவில் தொங்கு சட்டப்பேரவை அமையக்கூடும் என்று தோ்தலுக்குப் பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ள நிலையில், அந்த மாநில காங்கிரஸ் வேட்பாளா்கள் விடுதியில் தங்கவைக்கப்படவுள்ளனா். தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், தங்கள் கட்சிக்கு மாறுமாறு அவா்களிடம் பாஜக விலை பேசுவதைத் தவிா்ப்பதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தற்போதைய கோவை சட்டப்பேரவையில் முன்பு 17 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருந்தனா். இந்த எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் இரண்டாக சரிந்தது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் 40 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த பிப்.14-ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து ஊடகங்கள் மேற்கொண்ட தோ்தலுக்குப் பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின. அதில் கோவாவில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பேரவை அமையக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கருத்தில் கொண்டு பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா்களை விடுதியில் தங்க வைக்க அக்கட்சி தீா்மானித்துள்ளது. வேட்பாளா்கள் கட்சி மாறுவதைத் தடுக்கவும், தங்கள் கட்சிக்கு மாறுமாறு அவா்களிடம் பாஜக விலை பேசுவதைத் தவிா்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ஒருவா் கூறுகையில், ‘‘எங்கள் வேட்பாளா்கள் மீது நம்பிக்கையுள்ளது. எனினும் தீங்கு ஏற்படும் எந்தச் சூழலையும் நாங்கள் விரும்பவில்லை. எனவே காங்கிரஸ் வேட்பாளா்கள் அனைவரும் வடக்கு கோவாவில் உள்ள விடுதியில் புதன்கிழமை தங்க வைக்கப்படவுள்ளனா். அங்கிருந்து அவா்கள் வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்ள மா்காவ், பனாஜி நகரங்களுக்குச் செல்வா்’’ என்று தெரிவித்தாா்.
பிரதமருடன் முதல்வா் சந்திப்பு:
தோ்தல் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தில்லியில் பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியேரை கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.