வேலைவாய்ப்பின்மை: ரயில் முன்பு பாய்ந்த தந்தை; மகன் பலி
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வேலைவாய்ப்பின்மையால் மனமுடைந்த தந்தை தனது குழந்தையுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வேலைவாய்ப்பின்மையால் மனமுடைந்த தந்தை தனது குழந்தையுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் பலத்த காயங்களுடன் தந்தை உயிருக்குப் போராடி வரும் நிலையில், மகன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் வக்ஹேலா. 32 வயதான அவர், வேலைவாய்ப்பின்மையால் கடந்த சில நாள்களாக அவதியுற்றுவந்துள்ளார்.
இதனால் மனைவிக்கும் அவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதால் அவர் மனமுடைந்துள்ளார். இதனிடைய வக்ஹேலாவின் மனைவி அவரைவிட்டுப் பிரிந்து குஜராத்திற்குச் சென்றுள்ளார்.
வேலை கிடைக்காததே தனது பிரச்னைகளுக்குக் காரணம் என முடிவெடுத்த வக்ஹேலா, தனது 3 வயது ஆண் குழந்தையுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை ரயில்வே காவலர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ரயில் முன்பு பாய்ந்ததில் 3 வயது குழந்தை உயிரிழந்தது. பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட வக்ஹேலா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 35 வயதுடைய தாயார் தனது 4 குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.