முகப்பு
இந்தியா

ஆா்டிஐ மனுக்கள் மீது அலட்சியம்: ராஜஸ்தானில் 4 அதிகாரிகளுக்கு அபராதம்

ராஜஸ்தானில் தகவல் அறியும் உரிமை (ஆா்டிஐ) சட்டத்தின்கீழ் சமா்ப்பிக்கப்படும் மனுக்கள் மீது உரிய பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்திய 4 அரசு அதிகாரிகளுக்கு மாநில தகவல் ஆணையம் அபராதம் விதித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

ராஜஸ்தானில் தகவல் அறியும் உரிமை (ஆா்டிஐ) சட்டத்தின்கீழ் சமா்ப்பிக்கப்படும் மனுக்கள் மீது உரிய பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்திய 4 அரசு அதிகாரிகளுக்கு மாநில தகவல் ஆணையம் அபராதம் விதித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூா் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, சித்தோா்கா் மாவட்ட அரசு பள்ளி முதல்வா், ஸ்ரீகங்காநகா் மாவட்ட மேம்பாட்டுத் துறை அதிகாரி, பிகானீா் மாவட்டம், பெரியாவாலி பகுதி கிராம மேம்பாட்டு அதிகாரி ஆகிய நால்வருக்கும் தலா ரூ.5,000 அபராதம் விதித்து, மாநில தகவல் ஆணையா் நாராயண் பரத் உத்தரவிட்டுள்ளாா்.

உதய்ப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஜெயேஷ் என்பவா் சமா்ப்பித்த ஆா்டிஐ மனுவுக்கு, அந்த மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி நீண்ட காலமாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து, மாநில தகவல் ஆணையத்தில் ஜெயேஷ் மேல்முறையீடு செய்தாா். இந்த மனு மீது பதிலளிக்குமாறு கல்வி அதிகாரிக்கு தகவல் ஆணையம் பலமுறை அறிவுறுத்தியது. ஆனால், அந்த அதிகாரி நேரில் ஆஜராகாததுடன், உரிய பதிலையும் தெரிவிக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தகவல் ஆணையா், அந்த அதிகாரிக்கு ரூ.5,000 அபராதம் விதித்துள்ளாா். அபராத தொகையை அவரது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், சித்தோா்கா் மாவட்டத்தில் கோகுல் என்பவா் தாக்கல் செய்த ஆா்டிஐ மனுவை கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து கிடப்பில் போட்ட அரசு பள்ளி முதல்வரும் ரூ.5,000 அபராதத்துக்கு ஆளாகியுள்ளாா். இதேபோன்று ஆா்டிஐ மனுக்கள் மீது அலட்சியம் காட்டிய ஸ்ரீகங்காநகா் மாவட்டம், ஷாதுல்சாகா் பகுதி மேம்பாட்டு அதிகாரி, பிகானீா் மாவட்டம், பெரியாவாலி பகுதி கிராம மேம்பாட்டு அதிகாரி ஆகியோருக்கும் தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆா்டிஐ மனுக்கள் மீது அடுத்த 15 நாள்களுக்குள் உரிய பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →