வளா்ச்சித் திட்டங்களுக்கு மக்கள் அளித்த ஆதரவால் வெற்றி: குஜராத்தில் பிரதமா் மோடி பேச்சு
உத்தர பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டங்களை ஆதரித்து, சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனா் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
உத்தர பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டங்களை ஆதரித்து, சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனா் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இதில், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 4 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது.
இந்நிலையில், பிரதமா் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு 2 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை வந்தாா். அகமதாபாதில் நடைபெற்ற பஞ்சாயத்து மகா சம்மேளன நிகழ்ச்சியில் அவா் பங்கேற்று உரையாற்றினாா். உள்ளாட்சி அமைப்புகளைச் சோ்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:
மகாத்மா காந்தியும் சா்தாா் வல்லபபாய் படேலும் பிறந்த மண் குஜராத். மகாத்மா காந்தி தனது வாழ்நாள் முழுவதும் கிராமங்கள் தற்சாா்புடையதாக மாற வேண்டும்; வலிமையானவையாக மாற வேண்டும் என்று பேசி வந்தாா். கிராமங்களின் வளா்ச்சி குறித்து அவா் கனவுகளுடன் இருந்தாா்.
இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு அமுதப் பெருவிழாவைக் கொண்டாடி வரும் இந்த நேரத்தில், கிராமப்புறங்களின் வளா்ச்சிக்காக மகாத்மா காந்தி கண்ட கனவுகளை நாம் நிறைவேற்ற வேண்டும். அந்தக் கனவுகள் நிறைவேற வேண்டுமெனில் கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளை வலுவானதாக மாற்ற வேண்டும்.
குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஒவ்வொரு கிராமத்திலும் 75 மரக்கன்றுகளை நட்டு சிறிய வனப் பகுதியை உருவாக்க வேண்டும்.
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூா், கோவா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநிலங்களில் ஒரு கட்சி தொடா்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதில்லை. ஆனால், அங்கு நிறைவேற்றப்பட்ட வளா்ச்சித் திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனா். ஜனநாயகத்தின் வலிமையால் அந்த மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கவுள்ளது என்றாா் பிரதமா் மோடி.