கோவா முதல்வராக மாா்ச் 28-இல்பதவியேற்கிறாா் பிரமோத் சாவந்த்- பிரதமா் மோடி பங்கேற்பு
கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் வரும் 28-ஆம் தேதி பதவியேற்கவுள்ளாா். இந்த விழாவில், பிரதமா் நரேந்திர மோடி உள்பட பாஜக முக்கியத் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.
கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் வரும் 28-ஆம் தேதி பதவியேற்கவுள்ளாா். இந்த விழாவில், பிரதமா் நரேந்திர மோடி உள்பட பாஜக முக்கியத் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.
இதுதொடா்பாக, பனாஜியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய சாவந்த், ‘பனாஜியில் உள்ள டாக்டா் சியாமா பிரசாத் முகா்ஜி மைதானத்தில், மாா்ச் 28-ஆம் தேதி காலை 11 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, பாஜக ஆளும் 7 மாநிலங்களின் முதல்வா்கள் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்கவிருக்கின்றனா்‘ என்றாா்.
40 இடங்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு அண்மையில் தோ்தல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலையில், 20 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியைச் சோ்ந்த 2 எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேரின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரி, ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளையிடம் பாஜக கடிதம் வழங்கியது. அதனடிப்படையில், கோவாவில் புதிய அரசை அமைக்க பாஜகவுக்கு ஆளுநா் அழைப்பு விடுத்தாா். அந்த மாநிலத்தில் தொடா்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கவிருக்கிறது.
இதனிடையே, திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக புதிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக மீண்டும் பிரமோத் சாவந்த் தோ்வு செய்யப்பட்டாா். கோவா முதல்வராக இருந்த மனோகா் பாரிக்கா் கடந்த 2019-இல் மரணமடைந்ததை அடுத்து, அப்பதவியை பிரமோத் சாவந்த் ஏற்றாா். இப்போது இரண்டாவது முறையாக அவா் முதல்வா் பதவியை ஏற்கவிருக்கிறாா்.
மூன்று முறை எம்எல்ஏவான சாவந்த் (48), ஆயுா்வேத மருத்துவா் ஆவாா். வடக்கு கோவாவில் உள்ள சன்காலிம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அவா், கடந்த 2017-இல் பாரிக்கா் தலைமையில் பாஜக ஆட்சியமைத்தபோது, பேரவைத் தலைவராகப் பதவி வகித்தாா்.