ஒயோ நிறுவனத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள தில்லி விடுதி ஒன்று, காஷ்மீரை சேர்ந்த நபரை விடுதியில் தங்க அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, விடுதியை கண்டித்து சமூக வலைதளங்களில் பலர் கருத்து பதிவிட்டுவருகின்றனர்.
தேதி குறிப்பிடப்படாத அந்த விடியோவில், வரவேற்பு அறையில் அமர்ந்திருத்த பெண் ஊழியர், காஷ்மீரை சேர்ந்தவருக்கு விடுதியில் தங்க அனுமதி மறுப்பது போல தெரிகிறது. ஆதார் உள்பட தகுந்த அடையாள சான்றிதழ் காட்டிய பிறகும், காஷ்மீரை சேர்ந்த அந்த நபருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விடுதியில் தங்க ஒயோ இணையதளம் மூலம் அந்த நபர் பதிவு செய்துள்ளார். பின்னர், விடுதிக்கு அந்த நபர் நேரில் வந்த பிறகு, தனது மூத்த அலுவலரிடம் அந்த பெண் ஊழியர் தொலைபேசியில் தொடர்பு கொள்வது போல விடியோவில் பதிவாகியுள்ளது. அப்போது, அந்த நபருக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அந்த நபரிடமே தொலைபேசியில் கூறுமாறு பெண் ஊழியர் மூத்த அலுவலரிடம் கூறுகிறார்.
நீண்ட உரையாடலுக்கு பிறகு, விடுதியில் தங்க காஷ்மீரை சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என தில்லி காவல்துறை வலியுறுத்தியதாக அந்த நபருக்கு பெண் ஊழியர் விளக்கம் அளித்துள்ளார்.
இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாணவர் அமைப்பின் தலைவர் நசீர் கொய்ம், இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விடியோவை ட்விட்டரில் பதிவிட்ட அவர், "காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம், களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தகுந்த அடையாள அட்டை உள்பட மற்ற ஆவணங்கள் காண்பித்த பிறகும் காஷ்மீரை சேர்ந்த நபருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரியாக இருப்பது குற்றமா?" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ஒரு மாதத்தை எட்டியது உக்ரைன்- ரஷியா போா்
காஷ்மீரிகளை விடுதியில் தங்க அனுமதிக்க வேண்டாம் என ஏதேனும் உத்தரவிடப்பட்டுள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ள தில்லி காவல்துறை, "ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர் என்பதால் விடுதியில் முன்பதிவு மறுக்கப்படுவதாகக் கூறப்படும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் காவல்துறையின் வழிகாட்டுதலாகக் கூறப்படுகிறது. அப்படி எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை. வேண்டுமென்றே தவறாகக் கூறினால் தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். சில நெட்டிசன்கள் தில்லி காவல்துறையினரை வேண்டுமென்றே தவறாக சித்தரிக்கின்றனர். அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.