பிரதமர் அலுவலகத்தால் முன்கூட்டியே திட்டமிட்டப்பட்ட சதித் திட்டம்தான் தனது கைது நடவடிக்கை என குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கோட்சேவைக் கடவுளாகக் கருதுகிறார் என ஜிக்னேஷ் மேவானி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு அசாம் காவல் துறையினரால் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த மேவானி, பெண் காவலரைத் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டு மற்றொரு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் மேவானிக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், "இந்த வழக்கைப்போல தவறான எஃப்ஐஆர் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க சீர்திருத்தம் கொண்டுவரச் சொல்லி அசாம் காவல் துறைக்கு அறிவுறுத்த வேண்டும்" என குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது.
இதையும் படிக்க | அரசியல் கட்சித் தொடங்குகிறாரா பிரசாந்த் கிஷோர்?
இந்த நிலையில், தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஜிக்னேஷ் மேவானி இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
"எனது கைது நடவடிக்கை என்பது 56 இஞ்ச்-இன் கோழைத்தனம். குஜராத் பெருமையை இது குலைத்துவிட்டது. அசாம் காவல் துறையால் நான் கைது செய்யப்பட்டது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி.
குஜராத்தை மகாத்மாவின் கோயிலாகக் கருதும் பிரதமரை, மாநிலத்தில் அமைதி மற்றும் இணக்கத்துக்குக் குரல் கொடுக்குமாறுதான் ட்வீட் செய்தேன். அமைதி மற்றும் இணக்கத்துக்குக் குரல் கொடுக்கக் கூடாது என்பதுதான் இதற்கு அர்த்தமா?
இது பிரதமர் அலுவலகத்தால் திட்டமிடப்பட்ட சதித் திட்டம். குஜராத் தேர்தல் விரைவில் வருகிறது. என்னை அழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான் இது. கைப்பற்றப்பட்ட எனது கணிணியில் ஏதேனும் அவர்கள் பதிவேற்றம் செய்திருப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாக நான் அஞ்சுகிறேன்" என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.