உக்ரைனில் உடனடியாகப் போர் நிறுத்தம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, டென்மார்க்குக்கு செவ்வாய்க்கிழமை சென்றார். அந்நாட்டுப் பிரதமர் மேட் பிரெடரிக்சன் விமான நிலையத்துக்கே வந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.
அதையடுத்து தலைவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியாவுக்கும் டென்மார்க்குக்கும் இடையே பல்வேறு துறைகளில் நிலவும் நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பாக அவர்கள் விவாதித்ததாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. பசுமை எரிசக்தித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இருநாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் இருவரும் விவாதித்தனர்.
"இந்தியா-டென்மார்க்: பசுமை ஒத்துழைப்பு திட்டம்' கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. அத்திட்டத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்தும் இருநாட்டுப் பிரதமர்களும் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரதமர்கள் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறுகையில், "உக்ரைன் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பிரச்னைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலமாகவும் தூதரக ரீதியிலும் தீர்வு காணப்பட வேண்டும்.
கால்நடை பராமரிப்பு, நீர் மேலாண்மை, எரிசக்தி, கலாசாரப் பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியா-டென்மார்க் இடையே ஒப்பந்தங்கள் கையொப்பமாகின'' என்றார்.
பிரதமர் பிரெடரிக்சன் கூறுகையில், "உக்ரைன் மீதான போரை நிறுத்தி அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்குமாறு ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை இந்தியா வலியுறுத்தும் என நம்புகிறேன்'' என்றார்.
சுதந்திரமான இந்தோ-பசிபிக்: பேச்சுவார்த்தை தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், "உக்ரைனில் நிலவும் மனிதாபிமான பிரச்னை கவலையை ஏற்படுத்துகிறது. ஐ.நா. விதிகள், சர்வதேச விதிகள் உள்ளிட்டவற்றுக்கும் மற்ற நாடுகளின் இறையாண்மைக்கும் அனைத்து நாடுகளும் மதிப்பளித்து, சர்வதேச அமைதியைக் காக்க வேண்டும்.
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை விரைவில் நிறைவடையும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். இந்தோ-பசிபிக் பிராந்தியம் சுதந்திரமாகத் திகழ வேண்டுமெனவும் பேச்சுவார்த்தையின்போது உறுதியேற்கப்பட்டது. இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தகத்துக்கு நிலவும் இடையூறுகளைச் சரிசெய்வது குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, துறைமுகங்கள் நவீனமயம்-விரிவாக்கம், உணவு பதப்படுத்துதல், பொறியியல் துறை ஆகியவற்றில் டென்மார்க் நிறுவனங்களின் முதலீட்டையும், தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்திய நிறுவனங்களின் முதலீட்டையும் இருநாட்டுத் தலைவர்களும் வரவேற்றனர்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 2025-2026 காலகட்டத்தில் டென்மார்க் நிரந்தரமற்ற உறுப்புநாடாக இணைவதற்கு இந்தியா ஆதரவளிக்கும் எனப் பிரதமர் மோடி உறுதியளித்தார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கு அழைப்பு: டென்மார்க்கைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவிலும், இந்தியாவைச் சேர்ந்த சுமார் 60 நிறுவனங்கள் டென்மார்க்கிலும் செயல்பட்டு வரும் நிலையில், இந்தியா-டென்மார்க் தொழில் நிறுவனங்கள் வட்டமேஜை கூட்டத்தில் இருநாட்டுப் பிரதமர்களும் கலந்து கொண்டனர். தொழில்துறையில் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பாக அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "பசுமை தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சீர்திருத்தங்களை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. பிஎம்-கதிசக்தி திட்டத்தின் கீழ் அடுத்த தலைமுறை போக்குவரத்து கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவுள்ளன.
டென்மார்க் நிறுவனங்கள், இந்தியாவின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். பசுமை எரிசக்தியை உற்பத்தி செய்வதில் இந்தியாவில் பல்வேறு வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஏற்கெனவே இந்தியாவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாகப் பலனடைந்து வருகின்றன.
தற்போதைய சூழலில் இந்தியாவில் முதலீடு செய்யாத நிறுவனங்கள், பெரும் வாய்ப்பைத் தவறவிடும் என்றே கூறலாம்'' என்றார்.
நார்டிக் நாடுகள் கூட்டம்: இந்தியா-நார்டிக் நாடுகள் இடையேயான 2-ஆவது மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், பிரதமர் மோடியுடன் டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகளின் பிரதமர்களும் கலந்து கொண்டனர். முதலாவது மாநாடு கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் செயலாக்கம் குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.
கரோனா தொற்று பரவலுக்குப் பிந்தைய பொருளாதார மீட்டெடுப்பு, பருவநிலை மாற்றம், புத்தாக்கம்-தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சர்வதேச பாதுகாப்பு சூழல், ஆர்டிக் பகுதியில் இந்தியா-நார்டிக் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநாட்டின்போது விவாதிக்கப்பட்டது.
நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், பசுமை எரிசக்தித் துறையில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாகவும் தலைவர்கள் ஆலோசித்தனர். நார்டிக் நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக மதிப்பு சுமார் ரூ.40,000 கோடியாக உள்ளது.
இந்தியர்களுடன் சந்திப்பு: டென்மார்க்கில் உள்ள இந்திய சமூகத்தினரைப் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அந்நாட்டில் சுமார் 16,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.