'சகோதரனாக இருக்குமென நினைக்கவில்லை..' காதல் கணவரை இழந்தவர் கண்ணீர்
தெலங்கானாவில் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்த தலித் இளைஞர் புதன்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் சகோதரனே குற்றவாளி என்பது தெரிய வந்துள்ளது.
தெலங்கானாவில் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்த தலித் இளைஞர் புதன்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் சகோதரனே குற்றவாளி என்பது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் நடந்தது எப்படி என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன்படி, கடந்த புதன்கிழமையன்று, காதல் திருமணம் செய்த தலித் இளைஞர் நாகராஜு எங்கிருக்கிறார் என்று மனைவி அஷ்ரினின் சகோதரன் தேடிப் பார்க்கிறார். தனது சகோதரி அஷ்ரினும், அவரது காதல் கணவர் நாகராஜும் மலகாபெட்டில் மாருதி கார் கடை அருகே இருப்பதை கண்டுபிடிக்கிறார். ஆனால், அங்கே வைத்து அவர்களை தாக்க சரியான இடமில்லை என்பதை புரிந்து கொண்டு, அவர்களை பின் தொடர்கிறார்கள்.
அவர்களைத் தாக்க சரியான தருணத்துக்காக அவர்களை பின்தொடர்ந்து சென்ற கும்பல், பஞ்சாலா அனில் குமார் காலனி அருகே அவர்கள் வந்த போது தங்களது திட்டத்தை செயல்படுத்துகிறார்கள்.
இந்த தாக்குதலில், புதிதாக காதல் திருமணம் செய்திருந்த பில்லிபுரம் நாகராஜு மரணமடைகிறார். அவரது மனைவி அஷ்ரின் சுல்தானா படுகாயமடைகிறார்.
"நாங்கள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, ஒரு கும்பல் நாகராஜுவை கீழே தள்ளி கடுமையாக தாக்குகிறது. ஆனால், அப்போது எனக்கு தெரியவில்லை, அடிப்பது எனது சகோதர்தான் என்று.. யாருமே எங்களுக்கு உதவவில்லை" என்கிறார் அஷ்ரின்.
இரும்புக் கம்பியால் தாக்கியதில் நாகராஜு பலியானார். தலைக்கவசம் அணிந்திருந்தும் கூட, இரும்புக் கம்பியால் தாக்கியதில் நாகராஜுவின் மண்டை ஓடு உடைந்து மரணமடைந்தார்.
"ஆரம்பத்திலிருந்தே எங்கள் காதல் திருமணத்துக்கு சகோதரன் ஒப்புக் கொள்ளவில்லை. நாகராஜு இஸ்லாம் மதத்துக்கு மாறுவதாக ஒப்புக் கொண்ட பிறகும் கூட" என்கிறார் அஷ்ரின்.
இந்த சம்பவத்தில் அஷ்ரின் சகோதரர் சையத் மொபின் அகமது மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.